புதுக்கோட்டை:புதுக்கோட்டையில் அகரப்பட்டி, பெருமாள்பட்டி ஆகிய இடங்களில் புதிததாக அமைக்கப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டிடங்களை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
"அகில இந்திய அளவில் மதுவிலக்கு கொண்டு வந்தால் தான் பூரண மதுவிலக்கு சாத்தியம் என்று கூறினோம். ஆனால், பூரண மதுவிலக்கு வேண்டும் என்பதுதான் திமுகவின் குறிக்கோள். 2016ம் ஆண்டு பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறியது உண்மையா? பொய்யா? என்று தெரியவில்லை. ஆனால் அன்றைய தேர்தலில் இந்த கருத்து கூறியதாலேயே 20 முதல் 30 தொகுதிகளை, திமுக இழக்கக் கூடிய சூழ்நிலை உருவாக்கியது என்ற கருத்து நிலவுகிறது.
குறிப்பாக திருப்பூர், ஈரோடு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் தொழிலாளர்கள் திமுகவுக்கு எதிராக வாக்களித்தனர் என்ற குற்றச்சாட்டும் நிலவி வருகிறது. அதனால் தான் இந்த தேர்தலில் படிப்படியாக மதுக்கடைகளை குறைப்போம் என்று கூறினோம். அதன்படி 500 கடைகளை மூடியுள்ளோம்.
பூரண மதுவிலக்கு உடனடியாக கொண்டு வருவோம் என்று நாங்கள் கூறவில்லை. பூரண மதுவிலக்கு என்பது எங்களது லட்சியம். படிப்படியாகக் குறைப்பது என்பது எங்களுடைய நோக்கம். தனியார் பார்கள் அனுமதி பெற்று நடத்தி வருகின்றனர். அது ஒரு லக்சூரி பாராகும், டாஸ்மாக் பாருக்கும் அதற்கும் வித்தியாசம் உள்ளது.
அரசியல் கட்சி தொடங்கும் அனைவருமே கூறும் கருத்துக்களைத் தான் நடிகர் விஜயும் கூறுகிறார். தனித்து ஏதும் கூறவில்லை. நாங்கள் எங்கள் பாதையில் மிகத் தெளிவாக உள்ளோம். 2026 சட்டமன்ற தேர்தலில் எங்களுடைய இலக்கு 200 சீட். 234 லட்சியம்; அதில் 200 நிச்சயம். எங்களிடம் நேரடியாக யாரும் ஆட்சியில் பங்கு கேட்கவில்லை. அனைத்து கூட்டணிக் கட்சிகளும், தலைவர்களும் அன்போடும், பாசத்தோடும் உள்ளனர். " என்றார்.