சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, "மக்கள் முதல்வரின் மனிதநேய திருவிழா" சூரிய சுடர் - 20 - கை வாழ்வை சலவை செய் என்ற தலைப்பில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலையில், இன்று (பிப்.27) 300 சலவைத் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை கொசப்பேட்டையில் நடைபெற்றது. அதில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து மேடையில் பேசிய அமைச்சர் சேகர்பாபு, ”சுமார் 72 நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டு, அதில் 20வது நிகழ்ச்சியாக, இன்று சலவைத் தொழிலாளர்கள் 300 பேருக்கு அரிசி, மளிகைப் பொருட்கள் ஆகிய நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சோளிங்கர் திருக்கோயிலுக்கு அரசு நினைத்தால் கூட செய்ய முடியாத 12 கோடி ரூபாய் செலவில் சிறப்பான பணியினை செய்துள்ளார்கள்.
இதுவரை யாரும் செய்திடாத திருப்பணி இது. நாட்டில் முக்கியமான பணி ஒன்று மருத்துவம், நீரின்றி அமையாது உலகு நீர், அடுத்து கழிவுநீர் அகற்று வாரியம், அடுத்து உண்ண உணவு அடுத்தது, உடுத்த உடை. உடையை தூய்மையாக பயன்படுத்த இங்கு வந்துள்ள சலவைத் தொழிலாலர்கள் முக்கியமானவர்கள். அப்படிப்பட்ட சலவைத் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இங்குள்ளவர்கள் பெரும்பான்மையானோர் கட்சிக்கு அப்பாற்பட்டு உள்ளவர்கள், நீங்கள் வாழ்த்தினால் தலைவர் 100 ஆண்டு வாழ்வார்" எனத் தெரிவித்தார்.