சென்னை:வனத்துறை அமைச்சர் பொன்முடி எழுதிய "திராவிட இயக்கமும் - கருப்பர் இயக்கமும்" நூல் வெளியீட்டு விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. இந்த நூலை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட, திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி பெற்றுக் கொண்டார்.
இன உணர்வுக்கு எதிராக போராட்டம்: அப்போது, நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "இந்த நூல் வெளியீட்டு விழாவில் வரவேற்புரை ஆற்றுவதில் நான் பெருமை கொள்கிறேன். பொன்முடி 30 ஆண்டுகளுக்கு முன்பாக, திராவிடர்களையும், அமெரிக்காவின் கருப்பர்களையும் ஒப்பிட்டு தனது முனைவர் ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்தார். பின்னாளில் அது நூலாக வெளியானது.
அதற்கு கருணாநிதி அணிந்துரை எழுதியுள்ளார். இந்த மாதத்தில் மட்டும் நான் கலந்து கொண்டு வரவேற்புரை ஆற்றும் 3வது நிகழ்வு இது. திமுக தலைவர் கட்சியினர் நூல்களை எழுத வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அந்த வகையில், டி.ஆர்.பாலு, முரசொலி செல்வம், எ.வ.வேலு, திருச்சி சிவா ஆகியோரைத் தொடர்ந்து தற்போது க.பொன்முடி, ஆங்கிலேயர்களுக்கு எதிராக கருப்பர்கள் அன்று போராடினர், நம் இன உணர்வுக்கு எதிராக நாம் கருப்பு சட்டை அணிந்து போராடி வருகிறோம்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: " கொலை மிரட்டல் புகார்களுக்கு நடவடிக்கை இல்லை" - தர்ணா போராட்டத்தில் இறங்கிய அதிமுக எம்பி சி.வி சண்முகம்!
கருப்பர்களை கொச்சையாக நினைத்த காலம் மாறிவிட்டது:அதையடுத்து பேசிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, "ஆழமான அறிவார்ந்த ஒரு ஆணித்தரமான தரவுகள் நிறைந்த ஒரு நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையேற்றுள்ளார். திராவிட இயக்கத்தின் வெற்றியைக் கொண்டாடும் பிரகடன விழா வெளியிடப்பட்டுள்ளது.
திராவிடர் இயக்கம், கருப்பர் இயக்கம் ஆகிய இந்த 2 சமூகங்களில் பிரதான எதிர்ப்பு என்பது மத வழிபாடுகளின் கீழ் நிலைப்படுத்துவது தான் என்பதை மிகச் சரியாக குறிப்பிடப்பட்டுள்ளதை கருணாநிதி எடுத்துக்காட்டி உள்ளார். தெற்கிலிருந்து சூரியன் என்ற இந்த நூலிலே மிக முக்கியமான ஒரு ஆய்வாளர் சமூகவியல் அறிஞர் ஜார்ஜ், திராவிடர் என்பது கலாச்சாரம், தமிழ் என்று இணைந்து வளர்ந்தது. திராவிடர் கழகத்திற்கு அடையாளம் வழங்கியவர் பெரியார், அண்ணா, கருணாநிதி தான் என குறிப்பிட்டுள்ளார். கருப்பர் என்றால் கொச்சையாக நினைத்த காலம் மாறி, கருப்பு தான் எனக்கு பிடித்த நிறம் என்று மாறி வருகிறது.
கடினமான சப்ஜெக்ட்: தொடர்ந்து பேசிய அமைச்சர் துரைமுருகன், "பொன்முடி நீண்ட காலத்துக்கு முன்னால், கல்லூரியை முடித்து விட்டு டாக்டர் பட்டம் பெறுவதற்காக ஒரு ஆராய்ச்சியில் இறங்கி அதை முழுமையாகச் செய்தார். அந்த ஆராய்ச்சி மூலம் டாக்டர் பட்டமும் பெற்றார். அந்த நூல் ஆங்கிலத்திலே இருந்தது. நீண்ட காலத்துக்கு முன்னால் அந்த ஆங்கில புத்தகம் படிக்கிற வாய்ப்பு கிடைத்தது. கடினமான சப்ஜெக்ட். எளிமையாக்கித் தந்தால் கட்சித் தொண்டர்களுக்கு உதவியாக இருக்கும் என்றேன். தற்போது, அதேபோல் அற்புதமாக செய்துள்ளார்" எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நீர்வளத்துறை அமைச்சரும், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கௌதம சிகாமணி மற்றும் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்