புதுச்சேரி: புதுச்சேரியில் பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் முதலமைச்சர் ரங்கசாமியுடன் இணைந்து வந்து இன்று (மார்.25) தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். மேலும் அதிமுக, நாம் தமிழர் கட்சி சார்பிலும் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.
தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 20ஆம் தொடங்கிய நிலையில் புதுச்சேரியில் அந்தந்த கட்சிகள், அவர்களது வேட்பாளர்களைத் தேர்வு செய்து அறிவித்தனர். நேற்று வரை வேட்பாளர்கள் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில், இன்று (மார்ச்.25) புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் சூடு பிடிக்கத் தொடங்கியது.
இந்நிலையில் பாஜக வேட்பாளர் நமச்சிவாயம், முதல்வர் ரங்கசாமியுடன் இணைந்து, சித்தானந்தர் கோயில், அப்பா பைத்தியம் சாமி கோயில், கதிர்காமம் முருகர் கோயில் ஆகிய கோயில்களுக்குச் சென்று, சாமி தரிசனம் செய்து அன்னதானம் வழங்கினார். பின்னர் அங்கிருந்து மேளதாளங்கள் முழங்கக் கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் வழூதாவூர் சாலையில் உள்ள மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்தடைந்தார். அப்போது முதலமைச்சர் வாகனமும் அங்கு வந்தது.