கோயம்புத்தூர்:கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, நாற்பது நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வெற்றியளித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, தமிழ்நாடு முதலமைச்சருக்கு பாராட்டு விழா என மூன்று விழாக்களும் சேர்த்து 'முப்பெரும் விழா' என கோவை கொடிசியா மைதானத்தில் வருகிற 15ஆம் தேதி நடைபெறுகிறது.
அமைச்சர் முத்துசாமி செய்தியாளர் சந்திப்பு (Credit -ETV Bharat Tamil Nadu) நடைபெறவுள்ள இந்த முப்பெரும் விழா கூட்டத்திற்கு பந்தல் அமைப்பதற்காக, இன்று (திங்கட்கிழமை) பூமி பூஜை அமைச்சர் முத்துசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் கோவை மாவட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். பூமி பூஜை நிகழ்விற்குப் பின்னர் அமைச்சர் முத்துச்சாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், “முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்த முயற்சி காரணமாக இந்தியா கூட்டணி அருமையான வெற்றி பெற்றுள்ளது. ஆட்சி அமைக்க முடியவில்லை என்றாலும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. மத்தியில் இருக்கும் அரசு தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க முடியாமல், அவர்கள் இந்தியா கட்சியின் ஆலோசனையைக் கேட்க வேண்டும் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
தேர்தல் என்று வந்தவுடனே வெளிப்படையாகவே 40 இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என ஸ்டாலின் தெரிவித்தார். ஆளுங்கட்சியாக இருக்கின்றோம் என்ற அடிப்படையில் எந்த ஒரு விதிமீறலிலும் ஈடுபடவில்லை. அரசைப் பயன்படுத்தி எந்த சட்ட மீறலிலும் ஈடுபடவில்லை. வடமாநிலங்களில் என்னென்ன பிரச்னை நடைபெறுகிறது என்று அனைவருக்கும் தெரியும்.
பெருவாரியான வாக்குகளை நமக்கு மக்கள் கொடுத்திருக்கிறார்கள். இதற்கு காரணம் கடந்த மூன்று ஆண்டுகளில் செய்த மக்கள் பணிதான். பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் செய்தது தற்போது நிலைத்து இருந்திருக்கிறது. இந்த வெற்றிக்கு அடித்தளமாக அமைந்திருக்கிறது. திமுகவினரும், திமுக கூட்டணியில் உள்ளவர்களும் கடுமையாக உழைத்திருப்பதன் காரணமாகவே இந்த மாபெரும் வெற்றி கிடைத்திருக்கிறது.
இந்திய துணைக் கண்டத்தில் எங்கும் நடக்காத மாபெரும் வெற்றியாக இது இருக்கிறது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக முதல்கட்டமாக நன்றி அறிவிப்பு கூட்டம் கோவை மாவட்டத்தில் நடைபெறுகிறது. கோவையை மேற்கு மண்டலம் என பல பேர் பேசிக்கொண்டு இருந்தார்கள், இன்றைக்கு மொத்தமாக திமுக கையில் மேற்கு மண்டலம் இருக்கிறது என்பதை மக்கள் நிரூபித்திருக்கிறார்கள்.
அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் விரும்புகிறார். அதனால் கோவையில் கூட்டம் நடத்தப்படுகின்றது. ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் நன்றி சொல்லும் விதமாக கோவையில் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் அழைத்து, அவர்களுக்கு எப்படி செயல்பட வேண்டும் என்பதையும் ஸ்டாலின் விளக்கியுள்ளார்.
இந்த கட்சிக்காக எதையும் எதிர்பார்க்காமல் உழைக்கும் தொண்டர்களுக்கு நன்றி தெரிவிக்கவும் அறிவுறுத்தி இருக்கின்றார். வரும் 15ஆம் தேதி சனிக்கிழமை மாலை கொடிசியா அருகில் உள்ள மைதானத்தில் முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. 14ஆம் தேதி வெள்ளலூர் அருகே கூட்டம் நடத்த முதலில் திட்டமிடப்பட்டது. மழை காரணமாக அங்கு சிரமம் ஏற்படும் எனபதால், கொடிசியா மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது. 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கின்றனர்” என்றார்.
மேலும், 2026ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலுக்கான அடித்தளமா என்ற கேள்விக்கு பதிலளித்தவர், அதற்கு அடித்தளம் போட்டு வெகு நாள் ஆகிவிட்டது. முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்ற போதே அதற்கான பணிகள் நடைபெற்று இருக்கிறது என்றார்.
இதையும் படிங்க: விக்கிரவாண்டியை வெல்லப்போவது யார்? நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் கூறுவது என்ன? - VIKRAVANDI ASSEMBLY bye ELECTION