ஈரோடு:ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மகளிர் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட மதி சிறு தானிய உணவகத்தினை மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி இன்று திறந்து வைத்தார். இதையடுத்து மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், "மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் 14 ஆயிரத்து 6 மனுக்கள் பெறப்பட்ட நிலையில் 9 ஆயிரத்து 363 மனுக்கள் ஏற்று அதற்கான உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளது. நிராகரிப்பு செய்யப்பட்ட மனுக்கள் மீண்டும் கொடுத்தால் அதன் மீது பரிசீலனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
அவிநாசி அத்திக்கடவு திட்டத்தில் 1045 குளங்களில் தண்ணீர் ஓட்டம் சோதனை நிறைவு செய்யப்பட்டது. மாவட்ட ஆட்சியர் நேரடியாக சோதனை செய்து வருகிறார். 6 மோட்டார் இயங்குவதற்கான போதிய அளவு தண்ணீர் வந்தவுடன் அனைத்து குளத்திற்கும் தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசு குழு அமைத்தால் அந்த குழு அந்த விவகாரத்தில் சிறப்பாக செயல்படும் என்று தான் குழு அமைக்கப்படுகிறது. உதாரணத்திற்கு அனுமதி பெறாத அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகளுக்கான அனுமதி கடந்த 2016ம் ஆண்டு முன்பு முடிந்துவிட்டது. அதற்கு பிறகு அனுமதிப்பதற்கு கால அவகாசம் நீடிப்பு குறித்து குழு அமைக்கப்பட்டது.
அதன்படி தான் பிப்பிரவரி 29ம் தேதிக்குள் இறுதி வாய்ப்பு என பரிந்துரை செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 29ம் தேதி பிறகு அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகளுக்கான அனுமதி வழங்கப்படாது. வீட்டுவசதி வாரியத்தில் 30 ஆண்டுகளாக தீர்க்கப்படாத பிரச்சினைக்கு எல்லாம் முதல்வர் உத்தரவின்படி குழு அமைக்கப்பட்டு அதற்கு தீர்வு காணப்பட்டு வருகிறது.
555 திமுக வாக்குறுதியில், எதை செய்து உள்ளோம் என்று பட்டியலிட்டு சொல்ல தயாராக உள்ளேன். ஆனால் எடப்பாடி பழனிசாமி 14மட்டும் தான் நடக்கவில்லை என பட்டியலிட்டு உள்ளார். மீதமுள்ள வாக்குறுதி நடந்து இருப்பதாக தானே அர்த்தம். தமிழகத்தில் வீட்டு வசதி வாரியத்தின் கீழ் 60இடங்களில் உள்ள 10ஆயிரம் வீடுகள் மிகவும் மோசமான நிலையில் இருந்து இடிக்கப்பட்டு அந்த இடத்தில் புதிதாக வீடுகள் கட்டப்பட்ட உள்ளது.
அப்போது எந்த பகுதியில் தேவை என்பது குறித்து கணக்கெடுப்பின்படி வீடுகள் கட்டப்பட்ட உள்ளது. புதிய திட்டம் வீட்டு வசதி வாரியத்தின் கீழ் மற்றும் தனியார் பங்களிப்புடன் இணைந்து வீடுகள் கட்ட உள்ளோம். தமிழகத்தில் தேவைக்கு ஏற்றவாறு வீடுகள் கட்டப்படும், அதற்கான புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே 3ஆயிரம் வீடுகள் விற்பனை ஆகாமல் உள்ளது" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:ஊரப்பாக்கம் பகுதிவாசிகளே உஷார்.. தப்பியோடிய அனுமன் குரங்குகளை பிடிக்கும் முயற்சியில் ஊழியர்கள்!