சென்னை: சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பொதுநுலகத்துறையின் சார்பில் சென்னை பன்னாட்டு புத்தகக் கண்காட்சி 2025 (CIBF-2025) அறிமுக விழாவும், டாக்டர்.எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது வழங்கும் விழாவும் இன்று (நவ.19) நடைபெற்றது.
இந்த விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துகொண்டு, 'தமிழை உலகிற்கும் உலகை தமிழுக்கும்' என்ற தலைப்பில் சென்னை பன்னாட்டு புத்தகக் கண்காட்சி வருகிற 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரையில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தமிழக அரசால் நடத்தப்பட உள்ளது என்று அறிவித்தார்.
அதன் தொடர்ச்சியாக விழாவில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, "2025ஆம் ஆண்டு பன்னாட்டு புத்தகக் கண்காட்சியில் மதிப்புறு விருந்தினராக (Guest of Honour) இத்தாலியைச் சேர்ந்த பொலோனியா பன்னாட்டுக் குழந்தைகள் புத்தகக் கண்காட்சி நிறுவனம் கலந்து கொள்கிறது. மேலும், இந்த பன்னாட்டு புத்தகக் கண்காட்சியில் 50 நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், இலக்கிய முகவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல, சென்னை பன்னாட்டு புத்தகக் கண்காட்சியில் கலந்து கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கு வெளிநாடுகளைச் சேர்ந்த அரசு நிறுவனங்கள், பதிப்பாளர்கள் மற்றும் மொழிபெயர்ப்பு வல்லுநர்களை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளோம். அந்த வகையில், 1000 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" தெரிவித்தார்.
இதையும் படிங்க: கலை கல்லூரி பேராசிரியர்கள் பணி ஓய்வு.. நற்செய்தி கொடுத்த உயர்கல்வித்துறை!
மேலும் அதன் தொடர்ச்சியாக பேசிய அவர், "சமுதாயத்தை அறிவார்ந்த நிலைக்கு உயர்த்துவதில், புத்தக வாசிப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே, சென்னை புத்தகக் கண்காட்சி போன்று தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் கடந்த இரண்டு ஆண்டுகளில் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்ற புத்தகக் கண்காட்சிகளில் 86,44,190 பொது மக்கள் பார்வையிட்டு, அதில் ரூ.69.20 கோடி மதிப்பில் 81,44,525 நூல்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இலக்கியச் செழுமைமிக்க தமிழ் மொழியின் இலக்கிய மரபுகளை கொண்டாடும் வகையில், ஆண்டுக்கு நான்கு புத்தகக் கண்காட்சிகள் நடத்த உத்தேசிக்கப்பட்டு, தமிழகத்தில் நதி நாகரிக மரபுகளின் அடிப்படையில் வைகை, காவேரி, பொருநை மற்றும் சிறுவானி ஆகிய நான்கு இலக்கியத் திருவிழாக்கள் முறையே மதுரை, தஞ்சாவூர், கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலும் மற்றும் சென்னை இலக்கியத் திருவிழா நடத்த ரூ.1.55 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 2023ஆம் ஆண்டு சிறப்பாக நடைபெற்றது. இந்த ஆண்டும் இலக்கியத் திருவிழாக்கள் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனைத் தவிர்த்து, அரசு பொது நூலகங்களில் வாசகர்கள் மற்றும் போட்டித் தேர்வு மாணவர்கள் பயன்பெறும் வகையில் 1958 நூலகங்களில் Wi-Fi வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அரசு அறிவிப்பான மாவட்ட மைய நூலகங்கள் மற்றும் முழுநேர கிளை நூலகங்கள் புதுப்பித்தல் தொடர்பாக 29 மாவட்ட மைய நூலகங்கள் மற்றும் 72 முழு நேர கிளை நூலகங்களை ரூ.24 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. பொது நூலகங்களிலேயே முதன் முறையாக 108 நூலகங்களில் VR (Virtual Reality) சாதனங்கள் வழங்கப்பட்டு மாணவர்களுக்கு உயர் தொழில்நுட்ப சேவை வழங்கப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்