சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, "வீட்டு வசதித்துறையில் ஆய்வின் போது மக்களுக்கு என்ன பிரச்சனை உள்ளது, அதை எப்படி சரி செய்து தீர்வு கொண்டு வர வேண்டும் என்ற ஆலோசனை செய்ததில், பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். கட்டிட அனுமதி கொடுப்பதில் பல சிக்கல்கள் இருந்ததன் அடிப்படையில் முதலமைச்சர் ஆலோசனைப்படி பலவற்றை சுலபமாக்கி விடப்பட்டுள்ளது.
இதில் மிக முக்கியமாக பெரிய அளவிலே சாதாரண மக்களுக்கு பயன்படுகின்ற வகையில், இன்றைக்கு முதலமைச்சர் துவங்கி வைத்திருக்கிற 3400 சதுர அடி கட்டிடம் கட்டுவதற்கு அனுமதிக்காக மனு போட்டு கால தாமதம் ஏற்படுவது பல சிக்கல்களை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது.
மேலும் அதிகாரிகளுக்கும் நிறைய மனுக்கள் வருகின்ற காரணத்தினால், அவர்களுக்கும் வேலைகளும் அதிகமாக இருக்கிறது. இதனால் காலதாமதம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது, இதையெல்லாம் உணர்ந்து தான் சாதாரண மக்கள் குடியிருப்பதற்காக கட்டுகின்ற மக்களுக்கு சுயசான்று அடிப்படையிலேயே கால தாமதமாக செய்யாமல் மனு அளித்த உடனேயே கிடைக்க வேண்டும் என்ற ஒரு திட்டத்தை சொல்லி அதன் அடிப்படையில் தான் முதலமைச்சர் இன்று துவங்கி வைத்தார்.