சென்னை:பிரதமர் மோடியின் காங்கிரஸ் - திமுக கூட்டணி பற்றிய விமர்சனம் குறித்தும் தேர்தல் பத்திரங்கள் குறித்தும் சென்னையில் அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், "பாஜக மிகப்பெரிய ஊழலில் சிக்கியதை திசைதிருப்பவே, உண்மைக்கு புறம்பான செய்திகளை மக்களிடம் பிரதமர் மோடி பரப்புகிறார். 2018 பாஜக ஆட்சியில் தான், முதன்முறையாக தமிழக மீனவர்களின் படகை இலங்கை கடற்படை கைப்பற்றி ஏலத்தில் விட்டனர். அதைக்கூட தடுக்க துப்பில்லாத பிரதமர் மீனவர் பிரச்னை, மீனவர்கள் பாதுகாப்பு குறித்து பேசுகிறார்.
ஒகி புயல் உள்ளிட்டவைகளால் பாதித்தபோது வராத பிரதமர் மோடி, புயலால் பெரிதாக பாதிப்பு இல்லை என்றார். ஆனால் அப்போதைய எதிர்க்கட்சிதலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் மக்களை நேரடியாக சந்தித்து பாதிப்புகளை கேட்டறிந்தார். கன்னியாகுமரி கடற்கரைக்கு கூட வராத மோடி, கன்னியாகுமரி அரசு மாளிகையில் புகைப்பட கண்காட்சியை மட்டும் பார்த்துவிட்டு சென்றார்.
அம்மக்கள் மீனவர்கள் அடிக்கடி கடலுக்குள் மீன்பிடிக்கும் போது காணாமல் போவதைத் தடுக்கவும், காணாமல் போனபவர்களை மீட்கவும் உதவி செய்ய மத்திய அரசுக்கு கன்னியாகுமரி மீனவர்கள் வைத்த கோரிக்கையை 10 ஆண்டுகளில் நிறைவேற்றவில்லை' எனக் குற்றம்சாட்டினார்.
மேலும் பேசிய அவர், 'இன்றைக்கும் தமிழ்நாடு மீனவர்கள் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை மீட்டுத் தர வலியுறுத்தி அந்நாட்டு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இது தொடர்பாக ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
இதேபோல, சவுதி அரேபியாவில் சிக்கிக்கொண்ட தமிழ்நாடு மீனவர்களை அயலக அணியும், வெளிநாடுவாழ் தமிழர்களும் இணைந்து மீட்டனர். இப்படியான நிலையில், அவர்கள் எப்படி மீனவர்களை காப்பார்கள் என தெரியவில்லை.
பாஜக மிகப்பெரிய ஊழலில் சிக்கிக்கொண்டுள்ளது. இதனை மறைத்து மக்களின் கவனத்தை திசைத் திரும்பவே, பிரதமர் உண்மைக்கு புறம்பாக பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார். 2019-ல் தேர்தல் பத்திர நடைமுறையை கொண்டு வந்தார்கள். இது ஒரு லூட்டிங் (looting).
ஆர்பிஐ, தேர்தல் கமிஷன் உள்ளிட்டவை இதனால், ஊழலை ஊக்குவிக்கும் வாய்ப்புள்ளது. வெளிப்படைத்தன்மையை அழித்து தேர்தல் நடைமுறையை இது சீரழிக்கும் என எச்சரித்தனர். இன்று கோடிக்கணக்கான பணத்தை பணக்காரர்களிடம் இருந்து மிரட்டி பெற்றுள்ளார்கள். பெரிய ஒப்பந்தகாரர்களிடமும், நஷ்டத்தில் இயங்கிய பல நிறுவனங்களின் உரிமையாளர்களிடமும் பணத்தை மிரட்டி பெற்றுள்ளனர்.
வருமான வரியிலிருந்து காப்பாற்றுவதற்காக அவர்களை நஷ்ட கணக்கு காட்ட வைத்தீர்களா? இல்லையெனில், பல லட்சம் ரூபாய் கடன் தள்ளுபடி செய்து அவர்களிடம் லஞ்சம் போல இப்பணத்தை பெற்றுள்ளீர்களா? என கேள்வியெழுப்பினார்.