தேனி:பால்வளத்துறை குறித்த ஆய்வுக் கூட்டம், பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர், பால்வளத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு ஆலோசனையில் ஈடுபட்டனர்.
அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu) இந்த ஆலோசனையில், மாவட்டத்தில் பால் உற்பத்தி குறித்தும், பால் விற்பனை குறித்தும், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் பால் கொள்முதலை உயர்த்துவது குறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் ஈடுபட்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியதாவது, “கடந்த முறை தேனிக்கு ஆய்வுக்கு வந்தபோது இருந்ததை விட தற்போது 15 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் அதிகரித்துள்ளது. அதனை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். பால் உற்பத்தியாளர்களுக்கு ஆவினில் நிரந்தர விலை கொடுக்கப்பட உறுதி செய்யப்படும்.
அண்டை மாநிலங்களுக்கு பால் ஏற்றுமதி செய்வது குறித்து ஒழுங்குபடுத்தும் நடைமுறையை மேற்கொள்வோம். ஆவின் தேவைக்கு போக மற்ற மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்ய முடியும். மாவட்டத்தில் 500 இளைஞர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு வங்கிக் கடன் வழங்கி தொழில் முனைவோராக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், சிறிய அளவில் மாட்டுப்பண்ணை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நடப்பு ஆண்டில் 85 சதவிகித மானியத்துடன் கூடிய காப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தியுள்ளோம். அனைவரும் இந்த திட்டத்தில் இணைய வேண்டும். ஆவின் கொள்முதல் மாநில அளவில் ரூ.36 லட்சத்தை தொட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் வாங்குவதால் விவசாயிகளுக்கு அரசு திட்டம் 3 ரூபாய் ஊக்கத்தொகை கிடைக்காமல் போகிறது. தேனி மாவட்டத்தில் உள்ள மலை மாடுகளை காப்பற்றுவதற்கு வனத்துறையின் சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்” இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க:தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937 Vs மதுவிலக்கு திருத்தச் சட்டம் 2024.. என்னென்ன மாற்றங்கள்? முழு விவரம்! - Liquor Prohibition Amendment Bill