சென்னை: 2024-25ம் கல்வியாண்டில் எம்பிபிஎஸ் படிப்பில் சேரும் மாணவர்கள் தேசிய அளவிலான நெக்ஸ்ட் தேர்வினை எழுத வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், நீட் தேர்வும் வேண்டாம், நெக்ஸ்ட் தேர்வும் வேண்டாம் என்பது தான் தமிழ்நாட்டின் கொள்கை. எனவே, நெக்ஸ்ட் தேர்வினை எதிர்க்கிறோம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
டெங்கு மற்றும் மழைக்கால நோய்கள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, நகராட்சி நிர்வாகத்துறை, ஊரக வளர்ச்சித்துறையின் மாநில, மாவட்ட அளவிலான அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் சென்னை பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் குரங்கு அம்மை நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் கையேட்டினை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது, “தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் 57.6 சதவீதம் டெங்கு பாதிப்பு பதிவாகியுள்ளது. 10 மாவட்டங்களில் மட்டும் பாதிப்பு அதிகம் உள்ளது. தமிழ்நாட்டில் 11 ஆயிரத்து 743 பேருக்கு இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. டெங்கு பாதித்தவர்களில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த ஆண்டு உலகம் முழுவதும் 80 நாடுகளில் டெங்கு பாதிப்பு மிகப்பெரிய அளவில் இருந்தது. தமிழகத்தில் கடந்தாண்டு 9 ஆயிரத்து 121 என்ற அளவில் டெங்கு பாதிப்பு இருந்தது. அதில், 11 உயிரிழப்புகள் ஏற்பட்டது. தினமும் தமிழ்நாட்டில் சுமார் 500 டெங்கு பாதிப்பு பதிவாகின்றன. நேற்று நிலவரப்படி ஒரே நாளில் 258 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. டெங்கு பாதிப்பு எண்ணிக்கையை குறைத்துக் காட்டக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுகளில் குறிப்பாக 2012-ல் 66 இறப்புகளும், 2017-ல் 65 இறப்புகள் என இந்த இரண்டு ஆண்டுகளில் அதிகபட்சமான இறப்புகள் பதிவாகியது. குரங்கம்மை 1958 ஆம் ஆண்டுகளில் இருந்து உள்ளது. அப்போது பெரியம்மை என்ற பெயரோடு இருந்தது. வெளிநாடுகளில் இருந்து காய்ச்சல் பாதிப்புகளோடு வரும் பயணிகளை கண்டறிந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.