சென்னை: கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 8 ஆவது பிளாக் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (33). இவர் நேற்று மாலை தன்னுடைய மகன் புகழ்வேலனை தன்னுடைய மோட்டார் சைக்கிளின் முன்பகுதியில் அமர வைத்து வியாசர்பாடி மேம்பாலத்தில் சென்ற போது அங்கு காற்றில் பறந்து வந்த மாஞ்சா நூல் சிறுவனின் கழுத்தில் பட்டு அறுத்ததில் சிறுவனக்கு ரத்தம் வெளியேறியது.
உடனடியாக சிறுவனை தூக்கி கொண்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுவனுக்கு கழுத்தில் 7 தையல் போடப்பட்டது. தகவலறிந்து உடனடியாக வியாசர்பாடி ஆய்வாளர் அம்பேத்கர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டு மாஞ்சா நூலில் காத்தாடி விட்டவர்கள் யார் என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து சிறுவனின் தந்தை பாலமுருகன், நான் என் மகனுடன் எம்ஆர் நகரில் இருந்து வியாசர்பாடியை நோக்கி சென்று கொண்டிருந்தேன். அப்போது வியாசர்பாடி பாலத்தில் சென்றுகொண்டிருந்தபோது, அந்த பகுதியில் பறந்து கொண்டிருந்த காத்தாடியின் மாஞ்சா நூல் முன்னாள் அமர்ந்து கொண்டிருந்த மகனின் கழுத்தை கீறியது. சுதாரித்துக்கொண்டு பிரேக் பிடிப்பதற்குள் நூல் மகனின் கழுத்தை ஆழமாக அறுத்துவிட்டது. மருத்துவமனையில் அவனுக்கு ஏழு தையல் போடப்பட்டுள்ளது. தற்போது நலமாக உள்ளான். இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என பாலமுருகன் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: நடிகை கஸ்தூரி ஜாமீன் கோரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனு!
இதற்கிடையில், இச்சம்பவம் நடைபெற்ற சிறிது நேரத்திலேயே, ராயபுரம் தொப்பை தெருவை சேர்ந்த ஜிலானி பாஷா என்ற பெண் தன்னுடைய மாமியார் வீட்டிற்கு செல்வதற்காக வியாசர்பாடி மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது காற்றில் பறந்து வந்த மாஞ்சா நூல் அவருடைய கழுத்து மற்றும் கையில் அறுத்துள்ளது.
உடனடியாக அருகில் இருந்தவர்கள் காயமடைந்த ஜிலானி பாஷாவை சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், சம்பவம் தொடர்பாக வியாசர்பாடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் மாஞ்சா நூல் காத்தாடி விடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் மாஞ்சா நூல் அறுத்து சிறுவனும், பெண்ணும் காயமடைந்து பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் வடசென்னை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வியாசர்பாடி மேம்பாலம் அருகே செல்லும் வாகன ஓட்டிகள் மிக பதட்டத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், தடையை மீறி மாஞ்சா நூல் பயன்படுத்தியவர்கள் யார் என வியாசர்பாடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்