சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி காமன்தொட்டி கிராமத்தில் டாஸ்மாக் கடை முன் போலி மதுபானம் விற்பனை செய்ததாக தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி அதே பகுதியைச் சேர்ந்த சுந்தர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், டாஸ்மாக் அமைக்க வாடகைக்கு கொடுக்கப்பட்ட கடையை, குத்தகை காலம் முடிந்த பிறகும் காலி செய்யாதது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்ததால் தனக்கு எதிராக பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தமிழகம் முழுவதும் குத்தகை காலம் முடிந்த பிறகும் கடைகளை காலி செய்யாமல் நடத்தப்படும் கடைகளின் விவர அறிக்கையுடன் நேரில் ஆஜராகும்படி டாஸ்மாக் நிர்வாக இயக்குனருக்கு உத்தரவிட்டிருந்தது.
இதையும் படிங்க: சிறுவனின் கழுத்தை பதம் பார்த்த மாஞ்சா நூல்.. ஏழு தையல் போட்டு சிகிச்சை.. சென்னையில் பரபரப்பு!
அதன்படி, இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் நேரில் ஆஜராகியிருந்தார். அப்போது, குறிப்பிட்ட கடையை மூன்று நாட்களுக்கு முன் காலி செய்து உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாக டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் தெரிவித்தார்.
இதையடுத்து, 2019ம் ஆண்டு குத்தகை காலம் முடிந்த போதும், கடையை காலி செய்யாதது ஏன் எனவும், இதை கேள்வி கேட்டால் காவல் துறையினரை வைத்து பொய் வழக்கு தொடர்வீர்களா? எனவும், ஏன் இப்படி அடாவடி செய்கிறீர்கள்? எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
மேலும், மக்களுக்கு எதிராக செயல்படும் டாஸ்மாக் நிர்வாகம், சொந்த வருமானத்தை மட்டுமே பார்ப்பதாகவும், இதுபோல் மீண்டும் புகார் வந்தால் நீதிமன்றம் தீவிரமாக கருதும் எனவும் எச்சரித்த நீதிபதி, கடை வேண்டாம் என மக்கள் கூறினால், போலீசாரை வைத்து கடைகளை நடத்துவீர்களா? எனவும் கேள்வி எழுப்பினார்.
அரசு நிலம் என்றால் சட்டத்தை பயன்படுத்தும் போது, தனிநபர்களுக்கு சட்டம் இல்லையா? எனக் கேட்ட நீதிபதி, சட்டத்தை அரசு கையில் எடுக்க கூடாது எனவும் தெரிவித்தார்.
பின்னர், சுந்தருக்கு எதிரான வழக்கில் அடிப்படை முகாந்திரம் இல்லை எனக் கூறி ரத்து செய்த நீதிபதி, குத்தகை காலம் முடிந்தால், கடையை காலி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தும்படியும், டாஸ்மாக் கடை வேண்டாம் என மக்கள் கூறினால், அந்த கடைகளை மாற்ற வேண்டும் எனவும் டாஸ்மாக் நிர்வாக இயக்குனருக்கு உத்தரவிட்டார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்