சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று( நவ 18) சென்னையில் நடைபெற்ற 16வது நிதிக்குழு கூட்டத்தில் பங்கேற்று, தமிழ்நாடு மாநில வளர்ச்சி திட்டத்திங்களுக்கான நிதி ஒதுக்கீட்டிற்கான கோரிக்கை மனுவினை, 16வது நிதிக்குழுவின் தலைவர் அரவிந்த் பனகாரியாவிடம் வழங்கினார். இக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது, "தமிழ்நாடு அரசின் சார்பாகவும், தமிழ்நாட்டு மக்களின் சார்பாகவும் 16-வது நிதிக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். புகழ்பெற்ற பொருளாதார அறிஞர் டாக்டர்.அரவிந்த் பனகாரியா அவர்களின் சீரிய தலைமையின் கீழ் அமைக்கப்பட்டு, இன்று தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்திருக்கும் 16-வது நிதிக்குழுவின் பரிந்துரைகள், பரந்து விரிந்த இந்தியத் திருநாட்டின் அனைத்து மாநிலங்களின் தேவைகளையும், எதிர்பார்ப்புகளையும் நிறைவு செய்து இந்தியாவை உலகின் பொருளாதார வல்லரசு நாடாக மாற்றும் வகையில் அமைந்திடும் என்று நான் நம்புகிறேன்.
அந்த வகையில், கடந்த 15-வது நிதிக்குழுவின் பரிந்துரைகளின்படி மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்ககூடிய வரி வருவாய் பங்கினை 41 விழுக்காடாக உயர்த்தியதை நாங்கள் உளமாற பாராட்டுகிறோம். எனினும், இந்த பரிந்துரைக்கு மாறாக கடந்த 4 ஆண்டுகளில் மத்திய அரசின் மொத்த வரி வருவாயில் 33.16 விழுக்காடு மட்டுமே மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு சந்தித்து வரும் மூன்று குறிப்பிடத்தக்க சவால்களை நிதிக்குழுவின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன் - மாண்புமிகு முதல்வர்#CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin@katpadidmk @Udhaystalin @TThenarasu @mp_saminathan pic.twitter.com/0VNjIjXbMc
— TN DIPR (@TNDIPRNEWS) November 18, 2024
மாநிலங்களுக்கான வரிப்பகிர்வில் இடம்பெற்றிருக்கும் மேல் வரி மற்றும் கூடுதல் கட்டணம் ஆகியவற்றை மத்திய அரசு இக்காலகட்டத்தில் பெருமளவு உயர்த்தியதே இதற்கு முக்கிய காரணம் ஆகும். இதுமட்டுமின்றி மத்திய அரசும் மாநில அரசுகளும் இணைந்து செயல்படுத்திடும் திட்டங்களுக்கான மாநில அரசின் பங்குத்தொகை தொடர்ந்து உயர்ந்து வருவதும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் நிதி நிலையை மேலும் பாதிக்கின்றது.
ஒருபுறம் மத்திய அரசிடமிருந்து வரவேண்டிய வரிப்பகிர்வு குறைவதால் மாநில அரசுகளுக்கு ஏற்படும் பாதிப்புகள், மறுபுறம் மத்திய அரசு அறிமுகப்படுத்தும் திட்டங்களுக்கு மாநில அரசு செலவிடும் அதிக நிதி என இரண்டுமே மாநில அரசுகளுக்கு பெரும் சுமையை ஏற்படுத்துகின்றன.
எனவே, மத்திய வருவாயில் வரிப் பகிர்வின் பங்கு 50 விழுக்காடு உயர்த்தப்படுவது தான் முறையானதாகவும், அனைவருக்கும் ஏற்புடையதாகவும் இருக்கும் என்று பங்கீடு நம்புகிறோம். இவ்வாறு 50 விழுக்காடு வழங்கப்பட்டால் மட்டுமே மாநிலங்கள் தங்களுடைய தேவைகளுக்கேற்ப வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி நிதி மேலாண்மையில் உரிய சுயாட்சியுடன் செயல்பட இயலும்.
எனவே, மத்திய மற்றும் மாநில அரசுகளின் பங்களிப்போடு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களுக்கு உரிய அரசியலமைப்பு சட்டத்திருத்தங்கள் வாயிலாக ஒரு உச்சவரம்பை இந்த நிதிக்குழு பரிந்துரைத்தது. மாநில அரசுகளுக்கான 50 சதவீதம் வரிப்பகிர்வை உறுதி செய்திடும் என்று நான் நம்புகிறேன்.
ஒன்றிய அரசும் மாநில அரசும் இணைந்து செயல்படுத்திடும் திட்டங்களுக்கான மாநில அரசின் பங்குத் தொகை தொடர்ந்து உயர்ந்து வருவது தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் நிதிநிலையை பாதிக்கின்றது - மாண்புமிகு முதல்வர்#CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR @CMOTamilnadu @mkstalin@katpadidmk @Udhaystalin pic.twitter.com/gIwxX0jenU
— TN DIPR (@TNDIPRNEWS) November 18, 2024
மாநிலங்களுக்கு இடையேயான வரிப்பகிர்வினை முறைபடுத்துவதில் சமச்சீரான அணுகுமுறை தேவைப்படுகிறது. 9-வது நிதிக் குழு பரிந்துரைத்த 7.831 சதவீதத்திலிருந்து கடந்த 15-வது நிதித் குழுபரிந்துரைப்படி 4.079 சதவீதமாக தமிழ்நாட்டிற்கான வரி பகிர்வு தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வந்துள்ளது.
நாட்டிற்கே வழிகாட்டும் வகையில் பல முன்னோடி நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி, செம்மையான நிர்வாகத்தை தொடர்ந்து நல்கி வரும் தமிழ்நாட்டின் முன்னேற்றத்தை தொய்வடையச் செய்து தண்டிப்பதைப் போல தற்போதைய வரிப்பகிர்வு முறை அமைந்துள்ளது என்பதை நான் சுட்டிக் காட்ட வேண்டிய நிலையில் இருக்கிறேன். எனவே, சமச்சீரான வளர்ச்சியையும், திறமையான நிர்வாகத்தையும் இந்த வரிப்பகிர்வு முறையில் சமக்குறிகோள்களாகக் கருதி இந்த நிதிக் குழு தனது பரிந்துரைகளை வழங்கும் என்று நம்புகிறோம்.
மேலும், தமிழ்நாடு சந்தித்து வரும் மூன்று குறிப்பிடத்தக்க சவால்களை நிதிக்குழுவின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். கடந்த சில ஆண்டுகளாக, இயற்கைப் பேரிடர்களின் தாக்கத்தினால் தமிழ்நாடு பெரும் பேரிழவினை சந்தித்து வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும், பல்வேறு புயல்கள் மற்றும் இடைவிடாத மழைப்பொழிவு மற்றும் வெள்ளத்தினால் பொதுமக்களின் உயிர், உடைமை மற்றும் வாழ்வாதாரம் மட்டுமின்றி மாநிலத்தின் கட்டமைப்பு வசதிகளும் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகின்றன.
இயற்கைப் பேரிழிவுகளினால் ஏற்படும் இழப்புகளை சரிசெய்வதற்கு பெரும் அளவிலான நிதி மாநில அரசால் செலவிடப்பட வேண்டிய தேவை உள்ளதால், வழக்கமான வளர்ச்சித் திட்டங்களுக்கு உரிய நிதி ஒதுக்க முடியாத சூழல் ஏற்படுகிறது.
எனவே, இத்தகைய பேரிடர் துயர் தணிப்பு பணி மற்றும் மறு சீரமைப்பு நடவடிக்கைகளை மாநிலங்கள் உடனுக்குடன் மேற்கொள்ளும் வகையில் உரிய நிதியை வழங்கிட நிதிக்குழு பரிந்துரைக்க வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
அடுத்து, தமிழ்நாட்டில் அதிகமாக வளர்ந்துவரும் முதியவர்களின் எண்ணிக்கை மற்றும் இதன்காரணமாக மாநில மக்கள் தொகை அமைப்பில் ஏற்படும் மாற்றம் குறித்தும் நிதிக்குழுவின் கவனத்திற்கு கொண்டுவர விழைகிறேன். தற்போது தமிழ்நாட்டின் மக்கள் தொகையின் சராசரி வயது 36.4 ஆண்டுகள். இது உத்தரப்பிரதேச மாநிலத்தின் சராசரி அளவை விட 9.5 ஆண்டுகள் அதிகம்.
இதையும் படிங்க : அதிமுகவுடன் கூட்டணியா? தவெக அளித்த விளக்கம் !
16-வது நிதிக்குழுவின் பரிந்துரைக் காலம் முடிவடையும் பொழுது தமிழ்நாட்டின் சராசரி வயதானது 38.5 ஆண்டுகளாக இருக்கும். அதன்படி, நாட்டிலேயே வயதானவர்கள் அதிகம் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உருவெடுக்கும்.
தமிழ்நாடு இதுவரை பெற்று வந்துள்ள மக்கள்தொகை அடிப்படையிலான பயன் வேகமாகக் குறைந்து வருவதையும் சமூகப் பாதுகாப்புத் தேவைகள் அதிகரித்து வருவதையும் இது பிரதிபலிக்கிறது. அதிகரித்து வரும் முதியவர்களின் தேவைகளை நிறைவு செய்வதற்கு எதிர்வரும் பத்து ஆண்டுகளில் தமிழ்நாடு, தேவையான பொருளாதார வளர்ச்சியினை அடைவதுடன் பல்வேறு துறைகளில் அதிக முதலீடுகளை உடனடியாக செய்ய வேண்டியுள்ளது.
அந்த முயற்சியை மேற்கொள்ளாவிடில் முன்னேறிய மாநிலமாக மாறுவதற்கு முன்னால், முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக தமிழ்நாடு மாறிவிடும் அபாயத்தை இன்று சந்தித்து வருகிறது. இந்த மிக முக்கியமான கருத்தை நிதிக்குழு கவனத்தில் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்வதுடன், இந்த சமூக முதலீடுகளுக்கு தேவையான நிதி ஆதாரத்தையும் தமிழ்நாட்டிற்கு வழங்கவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
மூன்றாவதாக, நாட்டிலேயே அதிக நகரமயமாக்கலைச் சந்தித்து வரும் மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. நகர்ப்புற கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதும், அதற்கான நிதி ஆதாரங்களை பெருக்குவதும் தமிழ்நாடு சந்தித்து வரும் ஒரு மிக முக்கியமான சவால்களில் ஒன்றாக இருக்கிறது.
குறைவான நில வளம் மற்றும் நீர் வளம் ஒருபுறம், தொடர்ந்து அதிகரித்து வரும் மக்கள் தொகை மறுபுறம் - இவற்றுக்கு இடையே சென்னை போன்ற நகரங்களில் வாழ்ந்திடும் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், சுகாதாரம், சாலை வசதி மற்றும் தெரு விளக்குகள் அமைத்திடத் தேவையான முதலீடுகளைச் செய்திடவும் உள்ளாட்சி அமைப்புகளின் தரமான சேவைகளைத் தொடர்ந்து வழங்கிடவும், நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக அளவிலான நிதி மற்றும் மானியங்களை வழங்கிட நிதிக்குழு பரிந்துரை செய்திட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
மாநிலங்களின் செலவினங்களுக்கான தேவை தொடர்ந்து அதிகமாக உயர்ந்து வரும் வேளையில் சரக்கு மற்றும் சேவை வரி (GST) முறை நடைமுறைக்கு வந்த பின்னர் மாநில அரசுகள் தங்களுக்கு தேவையான நிதி ஆதாரங்களைப் பெருக்குவதில் பல தடைகளை சந்தித்து வருகின்றன. இதனால் மத்திய அரசின் நிதிப்பகிர்வை மாநிலங்கள் மிகவும் சார்ந்திருக்கக் கூடிய இன்றைய காலகட்டத்தில் 16-வது நிதிக்குழுவின் பங்கும், அதன் பரிந்துரைகளும் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன.
16-வது நிதிக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் நான் பணிவுடன் சொல்லிக் கொள்வதெல்லாம் தமிழ்நாட்டின் 8 கோடி மக்களும் இந்த நிதிக்குழுவின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார்கள். மாநிலங்களின் வளர்ச்சியை உறுதி செய்வதன் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியை அடைந்திடும் நோக்கில் இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்தை வலுப்படுத்தும் ஒரு அரிய வாய்ப்பை காலம் நமக்கு வழங்கி இருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு 16-வது நிதிக்குழு உரிய பரிந்துரைகளை வழங்கும் என்று நான் நம்புகிறேன்.
தமிழ்நாடு அரசின் சார்பாக நிதிக்குழுவின் பரிசீலனைக்கு வழங்கப்பட இருக்கும் விரிவான அறிக்கையினை கவனத்துடன் பரிசீலித்து, கடந்த காலங்களில் பல்வேறு நிதிக்குழுக்களின் பரிந்துரைகளினால் தமிழ்நாட்டுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு உரிய தீர்வை 16-வது நிதிக்குழு வழங்கும் என்று உறுதியாக நம்புகிறோம்" என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்