சென்னை:சென்னை கிண்டியில் உள்ள தேசிய முதியோர் நல மருத்துவ மையத்தில் யோகா சிகிச்சையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி மூத்தோர் நல மருத்துவமனையை பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார். அதில் 8.46 ஏக்கர் நிலப்பரப்பில் 200 படுக்கைகள், 40 தீவிர சிகிச்சை படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து மக்களும் மருத்துவ சேவையைப் பயன்படுத்தி வருகிறார்கள்.
மேலும், 37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புறநோயாளிகள் இங்கு பயன்பெற்றுள்ளனர், 220 அறுவை சிகிச்சைகள் நடைபெற்றுள்ளது. 44 ஆயிரத்து 761 ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பிசியோதெரபி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, நோயாளிகளுக்காக பிரத்தியேகமாக நூலகம், முதியோர்களுக்கு கேரம், பல்லாங்குழி போன்ற விளையாட்டு உபகரணங்களும் உள்ளது.
முதியோர்களுக்காக யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை துவக்கி வைக்கப்பட்டுள்ளது. பக்க விளைவு இல்லாத சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. உபவாச சிகிச்சை, யோகா சிகிச்சை, மசாஜ் சிகிச்சை, வாழையிலை குளியல், நீர் சிகிச்சை, அக்கு பஞ்சர், மனநல ஆலோசனை போன்றவை இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. முதியவர்கள் கோபமடையாமலும், அச்சமின்றி இருக்க இந்த பயிற்சிகள் ஒரு உதவியாக இருக்கும், இதுபோன்று பல்வேறு சிகிச்சைகளை தொடங்குவதில் இந்த அரசு பெருமை கொள்கிறது
தொடரும் நீட் தேர்வு குளறுபடி:நீட் தேர்வு தொடர்பாக 10 முறைக்கு மேல் நீட் விலக்கிற்கு கோரிக்கை வைத்திருக்கிறோம். ஒன்றிய அரசின் சார்பில், குறிப்பாக குடியரசுத் தலைவர் அலுவலகத்திலிருந்து உள்துறை அமைச்சகத்திற்கு இங்கிருந்து நிறைவேற்றப்பட்ட மசோதா உள்துறை அமைச்சகத்தின் மூலம் தமிழ்நாட்டில் இருக்கின்ற உயர் கல்வித்துறைக்கும், மருத்துவக் கல்வித்துறை நிர்வாகத்திற்கும் தொடர்ந்து 7 முறை சிறிய சிறிய விளக்கங்களைக் கேட்டு பதில் கடிதம் அனுப்பினர்.
சட்ட நிபுணர்களுடன் கலந்து பேசி அதற்கான பதிலையும் முறையாக அனுப்பி வைத்திருக்கிறோம். எனவே, மத்திய அரசு குடியரசுத் தலைவரிடத்தில் சொல்லி, மாநில அரசுகள் விரும்புகிற வகையில் நீட் தேர்விலிருந்து விலக்கு தர வேண்டும் என்ற வகையில் முடிவெடுப்பார்கள் என்று கருதுகிறோம்.