சென்னை:மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை, மேற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தின் மருத்துவத்துறை அமைச்சர் ஆம்பர் ஜேட் சாண்டர்சன் (Amber-Jade Sanderson), சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் இருக்கும் அமைச்சர் அலுவலகத்தில் நேற்று (பிப்.24) நேரில் சந்தித்தார்.
அதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்புகள், திட்டங்கள், வளர்ச்சிப் பணிகள் குறித்து கேட்டறிந்து, அவர்கள் நாட்டில் மருத்துவம் சார்ந்த சில திட்டங்களை எப்படி செயல்படுத்துவது உள்ளிட்டைவைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். அப்போது தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்புகள், திட்டங்கள், வளர்ச்சிப் பணிகள் குறித்து அவரிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “மேற்கு ஆஸ்திரேலியா மாநில சுகாதார அமைச்சருடன் மேற்கு ஆஸ்திரேலியா மாநில சுகாதாரம் மற்றும் மனநலம் துறையின் அமைச்சர் ஆம்பர் ஜேட் சாண்டர்சன், பாராளுமன்ற செயலாளர் ஜெகதீஷ் கிருஷ்ணன் மற்றும் சுகாதாரக் குழுவினர்கள் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையை சுற்றிப் பார்த்தனர்.
அரசு மருத்துவமனையின் கட்டமைப்பு மிகத் தூய்மையான முறையில் அம்மருத்துவமனையை பராமரிப்பது, அதிதீவிர சிகிச்சை பிரிவு மற்றும் உறுப்பு மாற்று சிகிச்சைகள் ஆகியவற்றை நேரில் ஆய்வு செய்துள்ளனர். தமிழ்நாட்டில் மருத்துவக் கட்டமைப்புகள் தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், நாளை (பிப்.25) பிரதமர் மோடி தமிழ்நாட்டில் கட்டி முடிக்கப்பட்ட கட்டடங்களைத் திறந்து வைப்பதற்கு ஏதுவாக சென்னை, கிண்டி தேசிய முதியோர் நல மையம் திறந்து வைக்கப்பட உள்ளது. தேசிய முதியோர் நல மையங்கள் இந்தியாவில் 2 இடங்களில் அமையும் என்று 2014-இல் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில், தமிழ்நாடு அரசு 9 ஏக்கர் நிலத்தினை தந்து, தேசிய முதியோர் நல மையம் அமைவதற்கு காரணமாக இருந்தது.
இந்த மையம் கட்டி முடிக்கப்பட்டு கடந்த காலங்களில் கரோனா சிகிச்சை மையமாக இருந்தது. அந்த மருத்துவமனையின் நோக்கத்தை நிறைவேற்றுகின்ற வகையில், முதியோர் நல மையமாக வரவேண்டும் என்கின்ற கோரிக்கையினை ஏற்று நாளை மதியம் 4 மணிக்கு பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட உள்ளது.
ஏற்கனவே டெல்லியில் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் எய்ம்ஸ் மருத்துவமனையின் ஒரு தளத்தில், முதியோருக்கான மருத்துவமனை திறந்து வைக்கப்பட்டு உள்ளதாக அறிகிறோம். ஆனால், பிரத்யேகமாக ஒரு மூத்தோருக்கான மருத்துவமனை என்பது இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் அமைந்திருப்பது என்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்று.
அதோடு தமிழ்நாட்டில் கட்டப்படவிருக்கின்ற 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டடங்கள் உளுந்தூர்பேட்டை, அரக்கோணம், ஓட்டேரி, சிவகாசி, திருவண்ணாமலை ஆகிய இடங்களில் கட்டப்படவிருக்கிற அவசர சிகிச்சை பிரிவு (Critical Care Block) ஒவ்வொன்றும் ரூ.23.75 கோடி செலவில் கட்டப்பட உள்ளன. அக்கட்டிடத்திற்கான அடிக்கலையும் பிரதமர் மோடி நாட்ட உள்ளார்.
அக்கட்டிடங்கள் 60 சதவீதம் மத்திய அரசின் நிதி ஆதாரம், 40 சதவீதம் தமிழ்நாடு அரசின் நிதி ஆதாரமாகவும் செயல்படுத்தப்பட உள்ளது. அதேபோல், தருமபுரி மாவட்டம் பாலக்கோடு, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, நீலகிரி மாவட்டம் குன்னூர், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, ஆகிய பகுதிகளில் தலா ரூ.1.75 கோடி மதிப்பீடுகளில் (integrated public health lab) ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகங்கள் கட்டும் பணிகளுக்கும் மோடி அடிக்கல் நாட்ட உள்ளார்.
மேலும், 60 சதவீதம் மத்திய அரசின் நிதி ஆதாரம் மற்றும் 40 சதவீதம் தமிழ்நாடு அரசின் நிதி ஆதாரமாகவும் கொண்டு கட்டப்பட உள்ளது. ICMR NIRT சார்பில் கூட்டு காசநோய் ஆராய்ச்சி மையம் ரூ.25 கோடியில் கட்டப்பட்டிருக்கிறது. தொடர்ந்து, சென்னை ஆவடியில் ஆய்வக வசதிகளுடன் கூடிய நலவாழ்வு மையம் ரூ.7.08 கோடி செலவில் கட்டப்பட்டிருக்கிறது.
மேலும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உணவு பகுப்பாய்வு நுண்ணுயிரியல் பிரிவு தொடங்கப்படவிருக்கிறது. இவை அனைத்தையும் பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார். எனவே 10 பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டவிருக்கிறார். ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்ட 4 மருத்துவ கட்டடங்கள் திறந்து வைக்கப்படவிருக்கிறது. மொத்தம் ரூ.313.60 கோடி மதிப்பீட்டில் கட்டிடங்கள் திறந்து வைக்கும் பணிகள் நாளை நடைபெற உள்ளது.
இதில் முதியோர்களுக்கான மருத்துவமனையில் முதல் பயனாளிகளுக்கான அனுமதி அட்டையை நாங்கள் தரவிருக்கிறோம். புற்றுநோய் பாதிப்புகள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது.மேலும், சாயப்பட்டறைகள் மற்றும் தோல் பதனிடும் தெழிற்சாலைகள், ரப்பர் தொழில் அதிகம் உள்ள மாவட்டங்களில் புற்றுநோய் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது.
அந்த வகையில், கன்னியாகுமரி, ஈரோடு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களில் புற்றுநோய் பாதிப்புகளுக்கு உள்ளாகும் மக்களை நேரடியாக கண்காணித்து, ரூ.3.30 கோடி மதிப்பீட்டில் திட்டங்கள் தீட்டப்பட்டு, நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு 4 மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது.
அந்த வகையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 9 ஆயிரத்து 566 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதில் இதுவரை மார்பக புற்றுநோய் பாதிப்பு 222 பேருக்கும், கருப்பை வாய் புற்றுநோய் 290 பேருக்கும், வாய் புற்றுநோய் 29 பேருக்கும் என மொத்தம் 541 பேருக்கு புற்றுநோய் பாதிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
புற்றுநோய் பாதிப்புகளைப் பொறுத்தவரை தொடக்க நிலை, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை, நான்காம் நிலை என்றெல்லாம் இருக்கின்றது. மூன்று மற்றும் நான்காம் நிலை பாதிப்புகள்தான் உயிரைப் பறிக்கும் பாதிப்புகளாக இருக்கும். ஆனால், முதல் பாதிப்புகளை தொடக்க நிலையிலேயே கண்டறிந்தால், அவர்களை எளிதாக காப்பாற்றிட முடியும்.
இந்த அரசு எடுத்த அதிதீவிர நடவடிக்கைகள் காரணமாக, ராணிப்பேட்டையில் தொடக்க நிலை பாதிப்புகளுக்கு உள்ளானவர்கள் கண்டறியப்பட்டு உள்ளனர். அவர்களை மிக எளிதாக மருத்துவ சிகிச்சைகள் முறைகள் மூலம் காப்பாற்றிட முடியும். தற்போது அதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் பாஜக வளர்ச்சி பெறும்.. நாடாளுமன்றத் தேர்தல் வியூகத்தை பிரத்யேகமாக அளித்த சிவராஜ் சிங் சவுகான்!