சென்னை:தேனாம்பேட்டை பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை கூட்டரங்கில், 2025-26ஆம் ஆண்டிற்கான காப்புறுதி கட்டணத்தொகை ரூ.1262.91 கோடிக்கான காசோலையை யுனைடெட் இந்தியா காப்பீடு நிறுவனத்திற்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
மேலும், மருத்துவர்களின் விருப்ப பங்களிப்பு தொகுப்பு நிதியிலிருந்து பணியிலிருக்கும்போது உயிரிழந்த ஆறு மருத்துவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 கோடி நிதியையும், முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டு திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரக கட்டுப்பாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள், அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு விருதுகளையும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து பேசிய அவர், "தமிழ்நாடு அரசுப் பணியில் பணிபுரிந்து வரும் மருத்துவர்கள், எதிர்பாராத வகையில் உயிரிழக்க நேரிட்டால், அவர்களின் வாரிசுதாரர்களுக்கு உதவித்தொகை வழங்கிட மருத்துவர்களின் விருப்ப பங்களிப்பு தொகுப்பு நிதி ஏற்படுத்தப்பட்டு, கடந்த 2020ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு, ரூ.50 லட்சம் வழங்கப்பட்டு வந்தது.
இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு பணியின் போது உயிரிழக்கும் அரசு மருத்துவர்களுக்கு மருத்துவர்களின் விருப்ப பங்களிப்பு தொகுப்பு நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கிட 2021 அக்.12 அன்று அரசாணை வெளியிடப்பட்டு, நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. மேலும், ஒவ்வொரு மருத்துவரும் விருப்பத்தின் அடிப்படையில் இந்த நிதியத்தில் சேர்ந்து பங்களிப்பாக 2020-21 ஆம் ஆண்டில் ரூ.6,000 மொத்தமாக செலுத்தினர்.
ஏழை, எளிய மக்களுக்கான திட்டம்:
அதன்படி, மார்ச் 2022ஆம் ஆண்டு முதல் மாதந்தோறும் ரூ.500 ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது வரை இந்த திட்டத்தில் சுமார் 10,900 மருத்துவர்கள் விருப்பம் தெரிவித்து, அதன் அடிப்படையில் சந்தா செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் மருத்துவர்களின் விருப்ப பங்களிப்பு தொகுப்பு நிதியிலிருந்து முதற்கட்டமாக 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் பணியின் போது உயிரிழந்த 13 மருத்துவர்களின் வாரிசுதாரர்களுக்கு மொத்தமாக ரூ.8.50 கோடி நிதிக்கான காசோலை முதலமைச்சரால் 2023 ஏப்ரல் 13 அன்று தலைமைச் செயலகத்தில் வழங்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் பணியின் போது உயிரிழந்த 7 மருத்துவர்களின் வாரிசுதாரர்களுக்கு மொத்தமாக ரூ.7 கோடி நிதிக்கான காசோலைகள் 2024 பிப்.27 அன்று வழங்கப்பட்டது. இந்த திட்டத்தில் இதுவரை பணியில் இருக்கும்போது தன் இன்னுயிர் இழந்த 20 மருத்துவர்களின் வாரிசுதாரர்களுக்கு மொத்தம் ரூ.15.50 கோடி வழங்கப்பட்டுள்ளது. மூன்றாம் கட்டமாக 2022-23ஆம் ஆண்டில் பணியின் போது உயிரிழந்த ஆறு மருத்துவர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.1 கோடி வீதம் ரூ.6 கோடி இன்று வழங்கப்பட்டுள்ளது.
ஏழை, எளிய மக்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் எவ்வித கட்டணமுமின்றி பயன்பெற வேண்டுமென்ற உயரிய நோக்குத்துடன் முன்னாள் முதலமைச்சர் 23.07.2009 அன்று உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான முதலமைச்சர் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தினை துவக்கி வைத்தார்கள். அதைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 10.01.2022 அன்று மீண்டும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை தொடங்கி வைத்தார்.