சென்னை: கடந்த சட்டமன்ற நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட மருத்துவத் துறை சார்ந்த திட்டங்கள், அதில் செயல்படுத்தப்பட்ட மற்றும் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்தும் வரும் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட வேண்டிய திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் இன்று (நவ.11) தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நடைபெற்றது.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்
மா.சுப்பிரமணியன், "கரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு அரசுப் பணியில் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதற்காக படிப்படியாக செவிலியர்கள் நிரந்தர மற்றும் தற்காலிக பணியில் அமர்த்தப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில், கடந்தாண்டு மட்டுமே கரோானா காலத்தில் பணியாற்றிய 1412 செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்தப்பட்டனர். தற்பொழுது 1271 நிரந்தரப் பணியிடங்கள் ஏற்பட்டுள்ளது. அந்த காலிப்பணியிடங்களுக்கு வரும் 14 மற்றும் 15ஆம் தேதி கரோனா காலத்தில் பணியாற்றிய 1271 ஒப்பந்த செவிலியர்களை நிரந்தர பணியாளர்களாக நியமிக்க ஆணைகள் வழங்கப்பட உள்ளது. மேலும், கரோனா காலத்தில் பணியாற்றிய எஞ்சிய 954 செவிலியர்கள் ஒப்பந்த செவிலியர்களாக பணியாற்ற ஆணை வழங்கப்பட உள்ளது.
இதுமட்டும் அல்லாது, இந்த செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்பட்ட பிறகு மீதமுள்ள 300 செவிலியர்களுக்கான பணியிடங்களை மருத்துவத் தேர்வு வாரியம் மூலம் பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் 100 சதவீதம் செவிலியர்கள் காலி பணியிடங்கள் இல்லாத நிலை உருவாக்கப்படும் மற்றும் கரோனா காலத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வேலை வாய்ப்பு வழங்கப்படும்.