தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"40 தொகுதிகளிலும் தலா 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை - Parliament constituencies of TN

Minister Ma Subramanian: மக்களிடம் ஏற்பட்டுள்ள எழுச்சியைப் பார்க்கும் பொழுது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் தலா 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Minister Ma Subramanian Press Meet
அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 10, 2024, 8:48 PM IST

Updated : Mar 10, 2024, 9:17 PM IST

சென்னை: சென்னையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் தாலிக்குத் தங்கம் திட்டத்தின் கீழ் எட்டு கிராம் தங்கம் ஆகியவற்றைப் பயனாளிகளுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன், "140 மாற்றுத்திறனாளிகளுக்கு 1 கோடியே 34 லட்சத்து 41 ஆயிரத்து 540 ரூபாய் மதிப்பிலான இருசக்கர வாகனம், தாலிக்குத் தங்கம் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்குத் தங்கம் உள்ளிட்ட 165 நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்ட 13 மாற்றுத்திறனாளிகளுக்கு 1 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 13 சிறப்புச் சக்கர நாற்காலியும் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 34 மாதங்களில் 42 அரசாணையை முதலமைச்சர் வெளியிட்டுள்ளார். இதுவரை யாரும் இப்படி அரசாணை வெளியிட்டது அல்ல.

மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை அதிகரித்து வழங்கப்பட்டுள்ளது. அரசுப் பணியில் கூட முன்னுரிமை என்ற அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்காக அளிக்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளால் என்னென்ன பணிகளைச் செய்ய முடியுமோ அந்த பணிகளில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என செயல்பட்டு வருகிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படுகின்ற உதவித்தொகை உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் 70 கட்டணப் படுக்கை அறைகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே எய்ம்ஸ் மருத்துவமனையில் கூட கட்டணப் படுக்கைகள் இல்லை முதலமைச்சரின் முயற்சியினால் 18 மாதக் காலத்தில் கட்டி முடிக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் 70 கட்டணப் படுக்கை அறைகள் பயன்பாட்டிலிருந்து வருகிறது" என்று கூறினார்

தொடர்ந்து பேசிய அவர், "தேர்தல் வேலைகளை எப்போதோ திமுக தொடங்கிவிட்டது தென்சென்னை மட்டுமல்ல 40 தொகுதிகளிலும் முதலமைச்சர் பணிகளை முடக்கி விட்டுள்ளார். தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்திய அளவில் அரசியல் கட்சி கூட்டணிக் கட்சிகளை ஒருங்கிணைத்து ஓட்டு மொத்தமாக உடன்பாடு காணப்பட்டிருப்பது முதன் முதலில் திமுகவில் தான்.

திமுக கூட்டணி படு வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. பெரிய வெற்றியைத் தரும். 2019-ஆம் ஆண்டு தேர்தலில், 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வெற்றி பெற்ற தொகுதிகள் இரண்டு; 4 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதிகள் 4; 3 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதிகள் 8 மற்றும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதிகள் 9 என இருந்தது.

ஆனால் வருகிற தேர்தலில், மக்களிடம் ஏற்பட்டுள்ள எழுச்சியைப் பார்க்கும் பொழுது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் தலா 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதிகளாகவே வரும் என்ற நம்பிக்கை உள்ளது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:“போதைப்பொருள் அதிகமாக இருப்பது குஜராத்தில்தான்”.. அமைச்சர் ரகுபதி தாக்கு!

Last Updated : Mar 10, 2024, 9:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details