சென்னை:மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருத்துவத் துறை ஆகிய துறைகள் சென்னை பெருநகர மாநகராட்சியுடன் இணைந்து, வேளச்சேரி பகுதியில் வயிற்றுப்போக்கு தடுப்பு மற்றும் வைட்டமின் ஏ வழங்கும் முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் இன்று துவக்கி வைத்தார்.
இதில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ககன்தீப் சிங்பேடி, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், "மழைக்காலங்களில் ஏற்படக்கூடிய வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம்கள் தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
துணை சுகாதார நிலையங்கள், ஆரம்பச் சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிக்கூடங்கள் என்று தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இந்த முகாம்கள் தொடர்ச்சியாக நடைபெற உள்ளது.
ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறப்புக்கு மிக முக்கிய காரணமாக வயிற்றுப்போக்கு இருக்கிறது. எனவே அதனைத் தடுக்கும் வகையில் ஓஆர்எஸ் பவுடர்கள் ரூ.1.25 கோடி செலவில், 40 லட்சம் பாக்கெட்டுகள் தமிழ்நாடு முழுவதும் விநியோகிக்கப்படுகிறது. ரூ.1.68 லட்சம் மதிப்பிலான ஜின்க் மாத்திரைகளும் வழங்கப்பட இருக்கிறது. இதன் மூலம் தமிழ்நாட்டில் 58 லட்சத்து 33 ஆயிரம் குழந்தைகள் பயன் பெற இருக்கின்றனர்.
அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் ஒவ்வொரு வீட்டிற்கும் 2 பொட்டலங்களும், 14 ஜிங்க் மாத்திரைகளும் வழங்கப்படுகிறது. மேலும், ஒரு மாதம் காலம் சுத்தம் மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்ச்சியாக நடைபெற உள்ளது. கை கழுவுதல் குறித்த செயல் விளக்கமும் ஏற்படுத்தப்படும்.
வயிற்றுப்போக்கு நிற்கும் வரை ஓஆர்எஸ் மருந்தை தொடர்ச்சியாக அளிக்க வேண்டும். இந்த மாத்திரைகளை தண்ணீரில் அல்லது தாய்ப்பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். இந்தியாவைப் பொறுத்தவரை 17.1 சதவீதம் வைட்டமின் ஏ குறைபாட்டினால் பார்வை இழப்பு இருந்து வருகிறது.
தமிழ்நாட்டைப் பொருத்தவரை 7 சதவிகிதம் பார்வை இழப்பு ஏற்படுகிறது. இதற்காக பொது சுகாதாரத்துறை சார்பில் வைட்டமின் ஏ உள்ள மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த முகாம் ஒரு மாத காலத்திற்கு நடைபெறும். இதில், 52 லட்சத்து 73 ஆயிரம் வைட்டமின் ஏ மாத்திரைகள் வழங்கப்படும்.
சைதாப்பேட்டை சிறுவன் உயிரிழப்பு: சைதாப்பேட்டையில் சிறுவன் இறப்பில் தவறான புரிதல் இருக்கிறது. அந்தப் பகுதியில் 2500 பேர் வசிக்கின்றனர். அப்படி குடிநீரில் பாதிப்பு இருந்தால் அனைவருக்கும் வயிற்றுப்போக்கு வந்திருக்க வேண்டும். கடந்த 10 நாட்களுக்கு முன்னர் குடிநீரில் கழிவுநீர் கலந்திருப்பதாக புகார் வந்தது. அதனை சரிசெய்யும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். குடிநீர் மேலாண்மை இயக்குனர் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்.
குடிநீர் வரும்பொழுது ஆரம்பத்தில் தெளிவாக வந்தாலும் முடிவில் சிறிது கலங்களோடு வருவதாக பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அந்த கலங்கள் குழாய் உள்ளே இருக்கும் கலங்கல்கள் தான் அப்படி வந்துள்ளது. ஆனாலும் இதனால் அந்த பாதிப்பு ஏற்படவில்லை. இருந்தாலும் சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று யாருக்காவது பாதிப்பு இருக்கின்றதா? என விசாரித்து வருகின்றனர்.