கோயம்புத்தூர்: மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். அப்போது, கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "18வது நாடாளுமன்ற முதல் கூட்டம் 24ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை நடைபெற்றது.
அமைச்சர் எல்.முருகன் அளித்த பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu) 3ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி உரையுடன் முடிந்தது. இந்த தேசம் 2047ஆம் ஆண்டு வளர்ச்சி அடைந்த நாடாக இருக்க வேண்டும் என்பதற்காக தொலைநோக்கு பார்வையோடு இந்த அரசு செயல்பட்டு வருகிறது. இந்த நாடாளுமன்றக் கூட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டுள்ளார்கள்.
என்ன நடைமுறையோ அதன்படி தான் பதவி ஏற்றுக்கொள்ள வேண்டும், தமிழக எம்பிக்கள் நடந்து கொண்டதை ஓம் பிர்லா இவ்வாறு நடந்து கொள்ளக்கூடாது என்று சுட்டிக் காட்டியுள்ளார். இது குறித்து முறைப்படுத்துவதற்கு சபாநாயகர் சார்பில் ஒரு கமிட்டியும் அமைக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தார்.
ஹத்ராஸுக்குச் செல்வதற்கு வழி தெரிந்த ராகுல் காந்திக்கு கள்ளக்குறிச்சிக்கு வருவதற்கு வழி தெரியவில்லை, இதில் அரசியல் செய்யக்கூடாது. தமிழகத்தில் ஏதேனும் சம்பவங்கள் நிகழ்ந்தால், இங்கு வந்தும் அவர்கள் பார்வையிட வேண்டும். அவர்கள் இங்கு வருவதற்கு யார் தடுக்கிறார்கள்?
தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சிக்கு வந்து மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறுவதற்கு ராகுல் காந்திக்கோ, மல்லிகார்ஜுன கார்கேவிற்கோ, முதலமைச்சர் ஸ்டாலினுக்கோ இதுவரை வழி தெரியாமல் இருக்கிறது. உடனடியாக ராகுல் காந்தி கள்ளக்குறிச்சிக்கு வந்து மக்களைச் சந்திக்க வேண்டும்" என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே சிறப்பான ஆட்சியை நடத்திக் கொண்டிருப்பதை பொறுக்காமலும், காங்கிரஸ் கட்சி ஜெயிக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்திலும் செயல்படுகின்றனர். பிரதமரின் ஆட்சிக்கு தடங்கள் ஏற்படுத்தும், மக்களுக்கு நல்லது செய்வதை தடுக்கும் முயற்சியாகவே தான் உள்ளது" எனக் கூறினார்.
பின்னர், வழக்கறிஞர்கள் போராட்டம் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, "உள்துறை அமைச்சர் அது குறித்து விளக்கமாக கூறியிருக்கிறார். தமிழிலும் அந்த பெயர்கள் மாற்றப்படும் என்பதைச் சொல்லி இருக்கிறார். மேலும், சட்டத்தையும் தமிழாக்கம் செய்து கொடுக்கப்படும் என்று கூறியிருக்கிறார்" என தெரிவித்தார்.
நீலகிரி தொகுதியில் வெற்றி பெற்ற ஆ.ராசா தொகுதியைப் பற்றியோ, மக்களைப் பற்றியோ கவலை கொள்ளவில்லை. எந்த செயலும் செய்யவில்லை என்பதும் மக்களின் நீண்ட நாள் எண்ணமாக இருக்கிறது. தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்திருந்தாலும், அம்மக்களுக்காக வேலை செய்வோம்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க:"சமூக நீதியைப் பற்றி பேச உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை" - ஸ்டாலினை விளாசிய அன்புமணி ராமதாஸ்!