தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“67% பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுவிட்டது”- அமைச்சர் வெளியிட்ட அறிக்கை! - PONGAL GIFT HAMPER

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு வழங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டமானது நேற்றுவரை (ஜன.11) 67 சதவீதம் நிறைவுபெற்றுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கூறியுள்ளார்.

அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன்,  பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கிய முதலமைச்சர்
அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கிய முதலமைச்சர் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 12, 2025, 11:59 AM IST

சென்னை:தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசு தொகுப்பை தமிழக அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டின் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை பொங்கல் பரிசாக வழங்கும் திட்டத்தைக் கடந்த வியாழக்கிழமை (9.1.2025) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், இந்த திட்டமானது நாளை ஜன.13ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இதுவரை எத்தனை பேர் பொங்கல் பரிசு தொகுப்பைப் பெற்றுள்ளன என்பது குறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் “கடந்த 09.01.2025 அன்று சென்னை, திருவல்லிக்கேணி நகரக் கூட்டுறவுச் சங்கத்தின் மூலம் சின்னமலை வேளச்சேரி பிரதான சாலையில் இயங்கிவரும் சைதாப்பேட்டை-11 நியாயவிலைக்கடையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கி திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

இதையும் படிங்க:"தமிழர்களின் பண்பாடும், வீரமும், கொண்டாட்டமும் கொண்ட பொங்கல் விழா"-கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

இதன் மூலம், தமிழ்நாடு முழுவதும் 34,793 நியாயவிலைக்கடைகளில் 2 கோடியே 20 லட்சத்து 94 ஆயிரத்து 585 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இதற்காக சுமார் 50,000 கூட்டுறவுத்துறை பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது.

அதன்படி, நேற்றைய நிலவரப்படி (11.01.2025) தமிழ்நாடு முழுவதும் 1 கோடியே 47 லட்சத்து 07 ஆயிரத்து 584 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 67 சதவீதம் பணிகள் நிறைவுபெற்றுள்ளது. மீதமுள்ள பயனாளிகளுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details