தஞ்சாவூர்:ஆளுநருக்கு சில வரைமுறைகள், சில அளவுகள், சில நெறிமுறைகள் உள்ளன. அதனை மீறுகிற போது தான் நாங்கள் உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை ஏற்படுகிறது என உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார்.
தஞ்சாவூரில் மாற்றுத் திறனாளிகள் நலவாழ்வு மற்றும் சமூக நலத்துறை சார்பில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு ரூ 3 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
மாநிலத்தின் வளர்ச்சிக்கு எந்த ஒரு பிரச்சனை வந்தாலும் அதனை எதிர்த்து நீதிமன்றம் வரை சென்று மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருந்து அதற்கான மணியோசையை எழுப்பி வருகிறது தமிழ்நாடு. மாநில உரிமை, மாநில சுயாட்சி என்று சொன்னாலே தமிழ்நாடு தான் என்று மற்ற மாநிலங்களுக்கு நினைவுக்கு வரும்.
மாநில ஆளுநர்களுக்கு சில வறைமுறைகள் உண்டு. சில அளவுகள் உண்டு. சில நெறிமுறைகள் உண்டு. அதை மீறுகிற நேரத்தில் தான், நாங்கள் உச்ச நீதிமன்றத்தை நாடுகிற நிலை ஏற்பட்டது. தமிழ்நாட்டில் ஆளுநருக்கு கொடுக்கக் கூடிய நெறிமுறைகள், வரைமுறைகள் மற்ற மாநிலங்களுக்கு பொருந்தக் கூடிய வகையிலும், உச்ச நீதிமன்றன் கதவை தட்டிய முதல்வர் தமிழ்நாடு முதலமைச்சர் மட்டுமே என கூறினார்.
இந்நிகழ்ச்சியில் எம்பி கல்யாணசுந்தரம். எம்எல்ஏக்கள் சந்திரசேகரன், நீலமேகம், மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர.