திருச்சி: வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் திருச்சி அல்லது பெரம்பலூர் தொகுதியில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு போட்டியிட உள்ளதாக தொடர்ந்து தகவல்கள் பரவி வருகிறது. அதேநேரம், நேருவின் ஆதரவாளர்கள் ஒரு சிலர், பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் அருண் நேரு போட்டியிட வேண்டும் என்று தங்களது விருப்பத்தைத் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதே போன்று, மேலும் சிலர், திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் அருண் நேரு போட்டியிட வேண்டும் என்று தொடர்ந்து நேருவின் ஆதரவாளர்கள் விருப்பம் தெரிவித்து வருவதாகத் தெரிகிறது. இந்த நிலையில், வருகின்ற தேர்தலில் அமைச்சர் நேருவின் மகன் அருண் நேரு எந்த தொகுதியில் போட்டியிட உள்ளார் என்ற எதிர்பார்ப்பு திமுக தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, திருச்சி மாநகரில் நடைபெற்ற அனைத்து கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளிலும் அருண் நேரு கலந்து கொண்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கினார்.
இதனால் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அருண் நேரு, திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்படுகிறது. இத்தகைய சூழலில், தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு சார்பில் ஆய்வு மாளிகை திறப்பு விழா, திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே இன்று (பிப்.23) நடைபெற்றது.