கரூர்: கரூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி, குளித்தலை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கிருஷ்ணராயபுரம் கிழக்கு மற்றும் தெற்கு ஒன்றியங்கள், சிவாயம், பஞ்சப்பட்டி, கருப்பத்தூர், மத்தகிரி, கொசூர் ஆகிய பகுதிகளில், பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
கரூர் தோகமலை அருகே உள்ள கொசூர் பகுதியில் பிரச்சாரம் துவங்கிய போது, நகர்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.என்.நேரு அங்கு வந்து கலந்து கொண்டு, தனது மகன் அருண் நேருவிற்கு வாக்கு சேகரித்தார். அப்போது, அமைச்சர் நேரு திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி பேசத் துவங்கினார்.
பேசத் துவங்கி சில நிமிடங்களில் ‘எனக்கு மயக்கமாக இருக்கிறது, ஒரு வரி மட்டும் பேசிவிட்டு கிளம்புறேன்’ என்று கூறி, குடிநீர் பிரச்சினை குறித்து பேசினார். இதைத் தொடர்ந்து பிரச்சார வாகனத்திலிருந்து கீழே இறங்கி, தனது காரில் மருத்துவமனை நோக்கி சென்றார்.
இந்நிலையில், தேர்தல் பிரச்சாரத்தின் போது அமைச்சர் கே.என்.நேரு, உடல்நலக்குறைவால் பாதியிலேயே புறப்பட்டுச் சென்ற சம்பவம், அப்பகுதி திமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த பிரச்சாரத்தின் போது, திமுக குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் இதுவரை ரூ.69.70 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் - தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு! - Satyabrata Sahoo