திருச்சி:திருச்சி மாவட்டம், லால்குடியில் திமுக மத்திய மாவட்டம் சார்பில் உறுப்பினர் கூட்டம் நடந்தது. இதில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், "தற்போது தேர்தல் களம் எப்படி இருக்கிறது என்றால், சீமான் ஒருபுறம் குறை சொல்லிக் கொண்டிருக்கிறார். புதிதாக கட்சி தொடங்கிய ஒருவர் நமக்கு எதிராக இருக்கிறார். அதிமுக அடுத்தது நாங்கள் தான் ஆட்சி அமைப்போம் என்று சொல்கிறார்கள்.
எவ்வளவு நன்மைகள் செய்தாலும் பாமகவும் திமுகவைப் பற்றி குறை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். பாஜக நமக்கு எதிரியாக இருக்கிறார்கள். திமுகவிற்கு எதிரிகள் அதிகமாக இருக்கும் காலம் தான் இப்போது. நாடாளுமன்றத் தேர்தல் அமைத்த அமைப்பு போல், வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் சுமூகமான அமைப்பு அமையும் சூழல் இருக்காது.
ஓபிஎஸ் ஒருமுறை சட்டமன்றத்தில் பேசும்பொழுது, 38 ஆண்டுகள் கழித்து மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இரண்டு முறை தொடர்ந்து ஆட்சி அமைத்தார். ஆனால், திமுக 1967, 1971க்குப் பிறகு தொடர்ந்து ஆட்சி அமைக்க முடியவில்லை. மாறி, மாறி தான் ஆட்சி அமைக்க முடிந்தது.