தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

2026 சட்டமன்றத் தேர்தல்: "திமுக கூட்டணியை ஸ்டாலின் விட்டுக்கொடுக்கமாட்டார்" - அமைச்சர் கே.என்.நேரு திட்டவட்டம்! - Minister K N Nehru - MINISTER K N NEHRU

Minister K.N.Nehru: தற்போதைய கூட்டணியை எங்கள் தலைவர் விட்டுக் கொடுக்கமாட்டார். எங்கள் கூட்டணி சரியான கூட்டணி. கூட்டணி குறித்து நான் தவறாகப் பேசியதாக செய்தியை மாற்றி வெளியிட்டுள்ளனர் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
அமைச்சர் கே.என்.நேரு பேட்டி (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 5, 2024, 6:05 PM IST

திருச்சி: செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் 153-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக முழுவதும் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அரசியல் கட்சியினர், சமுதாய அமைப்பினர், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், திருச்சி நீதி மன்றம் எதிரே உள்ள வ.உ.சிதம்பரனாரின் திருவுருவ சிலைக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண் நேரு, மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

வ.உ.சி சிலைக்கு மாலை அணிவித்த பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது, “திமுக தலைமையிலான கூட்டணி மிகச் சரியான கூட்டணி. நான் லால்குடியில் நேற்று கூட்டணி குறித்து பேசியதை சிலர் தவறாக திரித்து வெளியிட்டுள்ளனர். தற்போதைய கூட்டணியை எங்கள் தலைவர் விட்டுக்கொடுக்க மாட்டார்.

லால்குடியில் நான் பேசியதன் கருத்து என்னவென்றால், 38 ஆண்டுகளுக்கு பிறகு தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்ததை சட்டமன்றத்தில் ஜெயலலிதா பெருமையாக பேசினார். அதேபோல, கலைஞருக்கு பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அடுத்த முறையும் தொடர எந்த நிலை வந்தாலும் பாடுபடுவோம் என்ற அர்த்தத்தில் பேசினேன். அதை தவறாக திரித்து வெளியிட்டுள்ளனர். கூட்டணி கட்சி தலைவர்கள் எங்களோடு சுமுகமாக பழகுகின்றனர். எங்கள் கூட்டணி அருமையாக உள்ளது. எங்கள் கூட்டணி மிகச் சரியான கூட்டணி” இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, லால்குடியில் நடைபெற்ற திமுக உறுப்பினர் கூட்டத்தில், “ தற்போது திமுகவிற்கு எதிரிகள் அதிகமாக இருக்கின்றனர். ஆதலால் நாடாளுமன்றத் தேர்தலில் அமைத்த கூட்டணி போல், வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் சுமூகமான சூழல் இருக்காது” என நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:லோக்சபா தேர்தல் போல் 2026 தேர்தலில் அமைப்பு இருக்காது.. அதிமுக, நாதக, தவெக என அரசியல் பேசிய கே.என்.நேரு!

ABOUT THE AUTHOR

...view details