தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'எத்தனை முறை வந்தாலும், தமிழகத்தில் மோடிக்கு வெற்றி கிடைக்காது' - அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு - திருச்சி திமுக பொதுக்கூட்டம்

Minister I Periyasamy: பிரதமர் மோடி எத்தனை முறை தமிழகத்திற்கு வருகை தந்தாலும், தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட பாஜக வெற்றி பெற முடியாது என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி விமர்சித்துள்ளார்.

Minister I Periyasamy slams PM Modi Visit
அமைச்சர் ஐ பெரியசாமி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 6, 2024, 10:58 AM IST

Updated : Mar 6, 2024, 3:09 PM IST

அமைச்சர் ஐ பெரியசாமி

திருச்சி: திருவெறும்பூர் அடுத்த குண்டூர் பகுதியில் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டம் நேற்று (மார்ச் 5) நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஐ.பெரியசாமி உட்பட திருச்சி தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

அப்போது, விழா மேடையில் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, "இந்தியாவின் தலைசிறந்த முதலமைச்சராக நமது மு.க.ஸ்டாலின் செயலாற்றி வருகிறார். மகளிருக்காக திமுக அரசு எண்ணற்ற பல்வேறு திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. கல்வித்துறை, வேலைவாய்ப்பு, அரசியல் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் அனைவருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயலாற்றி வருகிறார்.

தமிழகத்தில், மொத்தம் 1 கோடியே 18 லட்சம் பேர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது. வெள்ள பாதிப்பால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு நிதி நெருக்கடி இருந்தாலும் மக்களுக்கான திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்கிற முனைப்போடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்.

ஆனால், மத்தியில் இருக்கக்கூடிய பாஜக அரசு, தேர்தல் நேரத்தில் அறிவித்த எந்த ஒரு வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. தாங்கள் ஆட்சிக்கு வந்தால் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு என்றார்கள். பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும், கருப்பு பணத்தை பறிமுதல் செய்து மக்களின் வங்கிக் கணக்குகளில் 15 லட்சம் செலுத்தப்படும் என அறிவித்தார்கள்.

தமிழகத்தில் ஒரு இடம்கூட வெற்றி பெற முடியாது:இது போன்ற எண்ணற்ற வாக்குறுதிகளை மக்களிடையே வழங்கி எதையும் நிறைவேற்றாத அரசுதான் பாஜக அரசு. தமிழ்நாட்டில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மக்களைச் சென்று பார்த்து ஆறுதல் கூறவில்லை, தமிழ்நாட்டிற்கு தேவையான நிதிகளை ஒதுக்கீடு செய்யவில்லை. மோடி எத்தனை முறை தமிழ்நாட்டுக்கு வந்தாலும் ஒரு இடம் கூட வெற்றி பெற முடியாது" எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், "கடந்த அதிமுக ஆட்சி காலத்தின் போது, அமைச்சரமாக இருந்த சி.விஜயபாஸ்கர் நீட் தேர்வு (NEET Exam) தமிழ்நாட்டிற்கு கொண்டு வரப்படாது என்று தெரிவித்திருந்தார். ஆனால், அவர்கள் ஆட்சிக் காலத்தில்தான் தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. அதன் பின்னர், திமுக அரசு ஆட்சி ஏற்ற பிறகு நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, அந்த மசோதாவை ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால், அதற்கு அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பின்பு தொடர்ந்து வலியுறுத்தி, தற்போது அந்த மசோதாக்களின் கோப்புகள் குடியரசு தலைவர் அலுவலகத்தில் உறங்கிக் கொண்டிருக்கின்றன. இதற்கெல்லாம் ஒரு தீர்வு கிடைக்க வேண்டுமென்றால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில், தமிழகத்தில் 40-க்கு 40 தொகுதிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற வேண்டும்.

மேலும், இந்திய அளவில் இந்தியா கூட்டணியும் (INDIA Alliance) வெற்றி பெற வேண்டும். அப்போதுதான், அதிமுக ஆட்சி காலத்தில் இழந்த நமது மாநில உரிமைகளை முழுமையாக மீட்டெடுக்க முடியும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:தேர்தல் வருவதால் மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி துவக்கம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம்!

Last Updated : Mar 6, 2024, 3:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details