சென்னை: வங்கதேசத்தில் இடஒதுக்கீடு தொடர்பாக போராட்டம் மற்றும் கலவரம் நடந்து வருகிறது. இதனால், உயர் கல்விக்காக வங்கதேசம் சென்றிருந்த, தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவ மாணவிகள் அங்கு சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பெயரில், தமிழர் நலன் மற்றும் அயல் நாடுகளில் வாழும் தமிழர்களின் மறுவாழ்வு ஆணையரகம், வங்கதேசத்தில் உள்ள இந்திய தூதரகத்துடன் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டது.
அதன்படி, இந்திய எல்லை அருகே உள்ள நகரங்களில் படிக்கும் மாணவ-மாணவிகள் தூதரக அதிகாரிகள் முலம் இந்திய எல்லைக்கு அழைத்து வரப்படுகின்றனர். பின்னர் அங்கிருந்து அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
இதற்காக சிறப்பு வாட்ஸ் அப் குழு ஒன்று உருவாக்கப்பட்டு அந்த குழுக்கள் மூலம், வங்கதேசத்தில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாடு மாணவ மாணவிகளை ஒருங்கிணைத்து, முதற்கட்டமாக நேற்று 49 மாணவ மாணவிகள் வங்கதேசத்தில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இந்நிலையில், இரண்டாவது நாளாக, கிருஷ்ணகிரி, கடலூர், தர்மபுரி, தஞ்சாவூர், சேலம், வேலூர், ராணிப்பேட்டை, மதுரை, விருதுநகர், ஈரோடு, விழுப்புரம், தென்காசி, திருவண்ணாமலை, தூத்துக்குடி, மயிலாடுதுறை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை ஆகிய மாவட்டத்தை சேர்ந்த 82 மாணவர்கள் கொல்கத்தா, கவுகாத்தி, அகர்தலா ஆகிய பகுதிகளின் விமான நிலையங்களில் இருந்து தமிழ்நாடு அரசு செலவில் விமானம் முலம் சென்னை வந்தனர்.
சென்னை விமான நிலையம் வந்த மாணவர்களை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், அயலகத் தமிழர் நலத்துறை கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, துணை கமிஷனர் ரமேஷ் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் அனைவரையும் அவர்களது சொந்த ஊர்களுக்கு வாகனங்கள் முலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.