சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவையில் பல்வேறு துறைகள் மீதான மானியக் கோரிக்கைக்கான விவாதம் கடந்த 20ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இன்று (ஜூன் 24) பல்வேறு துறைகள் மீதான மானியக் கோரிக்கை குறித்த நான்காம் நாள் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.
அமைச்சர் கீதா ஜீவன் (Credits - ETV Bharat Tamil Nadu) அப்போது சட்டப்பேரவையின் கேள்வி நேரத்தில், மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் கணபதி எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன், இந்தாண்டு சென்னையில் புதிதாக ஒரு பணிபுரியும் மகளிருக்கான விடுதி அரசால் கட்டப்பட உள்ளது என்றார்.
மேலும், சட்டமன்ற உறுப்பினர்களிடம் தேர்வு செய்து கொடுத்தால், வில்லிவாக்கம் பகுதியில் பணிபுரியும் மகளிருக்கான விடுதியை அரசு கட்டித்தரும். சலவை இயந்திரம், பார்க்கிங், பயோமெட்ரிக் நுழைவு, கண்காணிப்பு கேமரா, இணைய வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சமையலறை, இணையதள முன்பதிவு உட்பட அனைத்து வசதிகளுடன் கட்டப்படுகிறது எனவும், மாத வாடகையில் தங்குவோர் மட்டுமின்றி, போட்டித் தேர்வு மாணவர்கள் ஓரிரு நாட்கள் வாடகைக்கு அங்கு தங்க முடியும் என்றார்.
மேலும், சென்னை, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய ஊர்களில் பணிபுரியும் மகளிருக்காக கூடுதல் மகளிர் விடுதிகள் கட்ட இந்த ஆண்டு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது எனவும், இடம் தேர்வு செய்யப்பட்ட பின் பணிகள் தொடங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க:திருவண்ணாமலை கோயிலுக்கு விரைவில் 2வது மாஸ்டர் பிளான்: அமைச்சர் சேகர்பாபு தகவல் - Annamalaiyar Temple 2nd Master Plan