சென்னை:நடப்பாண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர், கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தொடரில், 4வது நாள் அமர்வு இன்று (பிப்.15) நடைபெற்றது.
இதில், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “சென்னை வேப்பேரி பகுதியில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் கடந்த 2 நாட்களாக போராடி வருகின்றனர். அவர்களது கோரிக்கையை அரசு ஏற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.
இதற்கு, சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் பதிலளித்தார். அப்போது பேசிய அவர், “அதிமுக ஆட்சியில் 2019ஆம் ஆண்டில், சுமார் ரூ.667 கோடி நிதி மாற்றுத்திறனாளிகளுக்காக ஒதுக்கப்பட்டது. ஆனால், திமுக ஆட்சியில் 2023 - 2024ஆம் ஆண்டில், ஆயிரத்து 106 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கான அனைத்து உதவித் தொகைகளும், இரண்டு மடங்காக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு முதலமைச்சரின் உத்தரவின் பேரில், சுமார் 2 ஆயிரத்து 759 பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, பட்டா வழங்கும் பணிகள் மேற்கோள்ளபட்டும் வருகிறது. எனவே, மாற்றுத்திறனாளிகள் போராட்டத்திற்கான காரணத்தை ஆராய்ந்து, அதனை அரசு பரிசீலிக்கும்” பதில் அளித்தார்.
இதையும் படிங்க:“தமிழகத்தில் ஆண்டிற்கு 17% பொறியியல் பட்டதாரிகள் படித்துவிட்டு வெளியேறுகின்றனர்” - பழனிவேல் தியாகராஜன்!