சென்னை: சென்னை சூளைமேட்டில் உள்ள ஜெய் கோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு மற்றும் பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். முன்னதாக நிகழ்ச்சியில் முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதி மொழி எடுக்கப்பட்டது. மேலும், நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் சிற்றரசு உட்பட துறை சார்ந்த உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது விழா மேடையில் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், "தன்னைவிட தன் பிள்ளை அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்று தாய் தந்தை நினைக்கிறார்கள். வளர்ந்த பிறகு பெற்றோர்களை காப்பாற்ற வேண்டிய கடமை ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் உள்ளது. வயதானவர்கள் சாப்பிட்டியா தூங்கிட்டியா என்று கேட்க ஒரு ஆள் வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
எந்த முதியோராக இருந்தாலும் அவர்களை பாதுகாப்பது நமது கடமை. முதியோர் பராமரிப்பு மையங்கள் அதிகரிக்க கூடாது என்பதுதான் முதலமைச்சரின் எண்ணம், பராமரிப்பு இல்லத்தை நாம் குறைத்திட வேண்டும். இன்று எடுத்த உறுதிமொழியை நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு காலத்தில் பெண்களைப் படிக்கவே விடமாட்டார்கள், வகுப்பறையில் 50 பேர் இருந்தால் அதில் இரண்டு பேர் தான் பெண்கள் இருப்பார்கள். பெண்கள் படிக்க வேண்டும் என்று குரல் கொடுத்தவர் பெரியார் அதற்க்கு பிறகு அண்ணா, கலைஞர், அதன் பிறகுதான் மகளிர் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உருவாக்கப்பட்டது.
தற்போது முதலமைச்சர் பெண்களுக்கு பல திட்டங்களை வடிவமைத்து வருகிறார். தமிழ் வழியில் படித்த மாணவிகளுக்கான புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் கிட்டத்தட்ட மூன்றரை லட்சம் மாணவிகள் பயனடைந்து வருகிறார்கள். அனைத்து உதவி எண்களையும் பெண்கள் தெரிந்து கொண்டு வைத்து இருக்க வேண்டும்" என பேசினார்.