திருப்பத்தூர்: திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதியில், இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையை அடுத்துள்ள கோடியூர் பகுதியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்று, திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரையை அறிமுகம் செய்து வைத்தார்.
அப்போது கூட்டத்தில் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, "ஜனநாயகத்திற்கு ஆபத்து வந்துள்ளது, இந்த தேர்தல் யார் வரக்கூடாது என்பதற்கான தேர்தல். இது பாசிசத்திற்கும், ஜனநாயகத்திற்கும் இடையே நடைபெறும் தேர்தல். பாசிசம் என்பது பணக்காரன் ஆட்சி செய்வது. அவர்கள் சொல்வது தான் நாட்டில் நடக்கும். ஆனால், நாம் ஜனநாயக காற்றை சுவாசிப்பவர்கள்.
தமிழ்நாட்டில் நடைபெறும் சமூகநீதிக்கும், மனுநீதிக்கும் இடையே நடைபெறும் தேர்தல். இந்தியாவில் மற்ற மாநிலங்களில் சமூகநீதி கிடையாது. இந்தியாவில் உயர்ந்த பதவியில் இருக்கும் குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தை திறக்கவில்லை. ராமர் கோயிலுக்கும் செல்லவில்லை. இது தான் மனுநீதி.
ஆனால், ஆதி திராவிடர்களும் கோயில் அறங்காவலர் குழுவில் இருக்கலாம் என்று கூறியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. இதுதான் சமூகநீதி” என்றும் பேசினார். மேலும், “பாஜக இயக்கம் எந்த காலத்திலும் தமிழ்நாட்டில் கால் ஊன்ற முடியாது. அதிமுக ஒரு வீணாப்போன கட்சி, ஈபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் தனித்தனியாக கடைகளைப் போட்டுக்கொண்டு 'எனக்கு ஓட்டு போடுங்கள், எனக்கு ஓட்டுப் போடுங்கள்' என்று கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.