திருப்பத்தூர்:வாணியம்பாடியில் உள்ள வாரச்சந்தை பகுதியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று (பிப்.22) சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து 2,000 குடும்பங்களுக்கு இலவச எரிவாயு அடுப்பு வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, மக்களுக்கு இலவச எரிவாயு அடுப்புகளை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து மேடையில் பேசிய அமைச்சர், “மத்திய அரசு தமிழ்நாட்டிற்குக் கொடுக்க வேண்டிய மானியத்தைக் குறைத்து, மாநில ஆட்சியாளர்களின் பெயரைக் கெடுக்க நினைக்கிறார்கள். கீழடி தமிழர்களின் தொன்மையான வரலாற்றை எடுத்துக் கூறுகிறது. 5,300 ஆண்டுகளுக்கு முன் இரும்பு காலம் இருந்தது, அதுவும் தமிழரின் காலம் என்பதை உலகிற்கு அறிவித்தவர் முதலமைச்சர். அவர்தான் இரும்பு மனிதர். அவர் தாய்மொழிக்காக, எவருக்கும் மண்டியிட மாட்டேன் எனக் கூறுகிறார்.
ஆனால், பலர் மத்திய அரசுக்குப் பயந்து மண்டியிட்டு இருக்கிறார்கள். மேலும், நிதி தராமல் தன்மானத்தின் மீது கை வைக்கிறார்கள். பண்பாட்டின் அடையாளம் தான் மொழி. வட இந்தியர்கள் தமிழர்களைப் போல் வேட்டை - சட்டை உடைகளை உடுத்துவது இல்லை. நமதுதமிழ்மொழியை அழிக்கப் படையெடுப்பு நடக்கிறது.
மும்மொழிக் கொள்கையில் 3-வது மொழியாக இந்தி அல்லது சமஸ்கிருதம் கற்க வேண்டும் எனக் கூறுகிறார்கள். 500 ஆண்டுகளுக்கு முன் வந்த மொழி இந்தி. 4,000 ஆண்டுகளுக்கு முன் வந்த மொழி தமிழ். பிரதமர் மோடி, தமிழ் பிடிக்கும் எனக்கூறி, ஐநாவில் தமிழ் படிக்கிறார். முன்னொரு காலத்தில் சமஸ்கிருதம் படித்தால் தான் மருத்துவ படிப்பு படிக்க முடியும் என்ற நிலை இருந்தது. அதற்கு எதிராகப் போராடியவர்கள் பெரியார், அண்ணா, கலைஞர் உள்ளிட்டோர்.