தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்சி பைபாஸ் சாலையில் உயர்மட்டப் பாலம் அமைக்காததற்கு காரணம் மத்திய அரசுதான் - எ.வ.வேலு குற்றச்சாட்டு! - தஞ்சை பைபாஸ் உயர்மட்ட பாலம்

Minister E.V.Velu: திருச்சி - தஞ்சை பைபாஸ் சாலையில் உயர்மட்ட பாலம் அமைக்காமல் இருக்க மத்திய அரசுதான் காரணம் எனவும், மாநில அரசுக்கு ஒத்துப் போகக்கூடிய அரசாக மத்திய அரசு இருந்தால்தான் எதையும் சரி செய்ய முடியும் என அமைச்சர் எ.வ.வேலு குற்றம் சாட்டினார்.

Minister E.V.Velu
அமைச்சர் எ.வ.வேலு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 24, 2024, 1:23 PM IST

எ.வ.வேலு பேட்டி

திருச்சி: தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு சார்பில் 'ஆய்வு மாளிகை', திருச்சி காஜாமலையில் நேற்று (பிப்.23) திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, “திருச்சி - தஞ்சை பைபாஸ் சாலையில் பால் பண்ணை முதல் துவாக்குடி வரையில் சர்வீஸ் சாலை வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட நாட்களாக முன்வைக்கப்படுகிறது.

இதில், மத்திய அரசு சாலை அமைப்பதற்கு மாநில அரசுதான் நிலத்தை கையகப்படுத்தி கொடுக்க வேண்டும் என்று கேட்கிறது. நீண்ட நாட்களாக பேசப்பட்டு வரும் இந்த விவகாரத்தில், ஒரு சிலர் சர்வீஸ் சாலை வேண்டாம், உயர்மட்டப் பாலம் மட்டும் போதும் என்கிறார்கள். ஒரு சிலர் சர்வீஸ் சாலை வேண்டும் என்று கேட்கிறார்கள்.

இது தொடர்பாக அனைத்து மக்களையும் ஒன்றாக கொண்டு வர வேண்டும் என்று பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இது மட்டுமல்லாமல், மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம்.

துறை சார்ந்த அமைச்சர் நிதின் கட்கரியிடம் நாங்கள் கோரிக்கை வைத்தபோது, தபாலை வாங்கி வைத்துக் கொண்டார். ஒன்றும் ஏற்பாடு செய்யவில்லை. அதுமட்டுமல்லாமல், முறையாக நிதி ஒதுக்கப்படுவதில்லை. மத்திய அரசு ஒத்துழைப்பு கொடுக்கும் பட்சத்தில், தஞ்சை பைபாஸில் உயர்மட்டப் பாலம் அமைப்பதாக இருக்கட்டும், இரண்டு பக்கமும் சர்வீஸ் சாலை அமைப்பதாக இருக்கட்டும் மாநில அரசு கண்டிப்பாக அமைத்து தரும்.

சுங்கச்சாவடி: உரிய கால நிர்ணயம் முடிந்த பின்னரும் செயல்பட்டு வரும் நான்கு சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் என்பது குறித்து தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு நாங்கள் கடிதம் எழுதி உள்ளோம். பணத்தை மட்டும் வசூல் செய்கிறார்களே தவிர, எங்கும் பராமரிப்பு இல்லை. ஏழு மீட்டர் சாலையை 10 மீட்டர் சாலையாக மாற்றி, சுங்கக் கட்டணம் வசூல் செய்யும் மத்திய அரசு முறையாக பராமரிப்பது இல்லை. குறிப்பாக முட்களைக்கூட அகற்றுவதில்லை.

மாநில அரசுக்கு ஒத்துப்போகக்கூடிய அரசாக மத்திய அரசு இருந்தால்தான் எதையும் சரி செய்ய முடியும். மத்திய அரசு முரண்பட்டு இருப்பதால், நமக்கு சரியான பதில் கிடைக்கப் பெறவில்லை.

மத்திய அரசின் நிகழ்ச்சிகள் நடக்கும்போது அதில் முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்து, மாநில அரசு சார்பாக பிரதிநிதிகளாக நாங்கள் கலந்து கொள்கிறோம். ஆனால், மத்திய அரசுதான் எங்களுக்கு எதிலும் ஒத்துப் போகவில்லை. பொன்மலை மேம்பாலம் பணிகள் வேகமாக நடக்க அதிகாரிகளுக்கு உத்தரவு போடுகிறேன்" என்றார்.

இதையும் படிங்க:புதுக்கோட்டையில் அரசு நிலத்தை தனிநபர் தனக்கானது எனக் கூறியதால் அமைச்சர் நிகழ்ச்சி ரத்து!

ABOUT THE AUTHOR

...view details