கோயம்புத்தூர் : கோயம்புத்தூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் சாலை பணிகளை, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். ஆய்வின் ஒரு பகுதியாக மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா காலனி பகுதியில் நடைபெற்று வரும் மேம்பால பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,"கடந்த மூன்று ஆண்டுகளில், கோவை மாவட்டத்தில் மட்டும் ரூ.997 கோடி மதிப்பீட்டில் 664 கிலோ மீட்டர் அளவில் சாலைகள் சீரமைக்கப்பட்டு, விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த நிதி ஆண்டிற்குள் 142 கிலோ மீட்டர் சாலைகள், ரூ.332 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்படும்.
மேற்கு புறவழிச் சாலை அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட 32 கிலோ மீட்டரில், முதல் கட்டமாக 12 கிலோமீட்டர் சாலை அமைப்பதற்கு தமிழக அரசால் ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு மூன்று கட்டமாக நிலம் எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும் ரூ.1,291 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அவிநாசி மேம்பாலப் பணிகள், முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. வருகின்ற 2025ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மேம்பால பணிகள் முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படும்.