வேலூர்:காட்பாடி அருகே செம்பராயநல்லூர் சமத்துவபுரம் கிராமத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ், ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் ஆயிரம் மரக்கன்றுகள் வீதம் 247 ஊராட்சிகளில் 2 லட்சத்து 47 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யும் திட்டத்தையும், ரூபாய் 11 லட்சத்து 97 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி கட்டிடத்தையும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார்.
அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர் சந்திப்பு (Credits - ETV Bharat Tamil Nadu) பின்னர் நிகழ்ச்சியில் துரைமுருகன் பேசியதாவது, “வருங்கால சமுதாயத்தை உருவாக்கும் பணியில் ஆசிரியர்கள் இருப்பதால் குழந்தை பருவத்திலேயே நல்ல கருத்துக்களை விதைக்க வேண்டும். சிறிய வயதில் கற்றுக் கொடுக்கப்படும் நல்ல பழக்கங்கள் தான், பிற்காலத்தில் அவர்களின் பயனுள்ளதாக அமையும். மேலும், குழந்தைகளுக்கு பாடம் நடத்துகிறோம் என்பதை நினைக்காமல், தெய்வங்களுக்கு கல்வி அளிக்கிறோம் என்ற நினைவில் கல்வி கற்றுக் கொடுக்க வேண்டும். ஏனென்றால் குழந்தையும் தெய்வமும் ஒன்று" என்றார்.
இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, "தற்போது மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்பட்டு வரும் நீர் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும். சரபங்கா நீரேற்றும் திட்டம் அதிமுக ஆட்சியில் துவக்கி அப்படியே விடப்பட்டது.
அதன் பிறகு வந்த திமுக ஆட்சி தான் அந்த திட்டத்தை முழுவதுமாக நிறைவேற்றியுள்ளோம். அந்த திட்டத்தில் கடைசி சில ஏரிகளுக்கு நீர் ஏற்றுவதில் சில பிரச்னைகள் ஏற்பட்டது. தண்ணீர் எடுத்துச் செல்லும் வழியில் தனியார் நிலங்கள் இருப்பதால், அவர்கள் நிலத்தை வழங்காமல் நீதிமன்றத்திற்குச் சென்று விட்டனர். எனவே, சில ஏரிகளைத் தவிர மற்ற ஏரிகளுக்கு தண்ணீர் சென்று கொண்டு தான் இருக்கிறது" என்றார்.
மழைக் காலங்களில் வெளியேற்றப்படும் உபரி நீர் சேமிக்க தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது என செய்தியாளர்கள் கேட்டதற்கு, "மழைக்காலங்களில் பெருக்கெடுத்து வரும் உபரி நீரை சேமிக்கக் கூடிய வகையில் தான் சரபங்கா நீரேற்றும் திட்டம், அத்திக்கடவு அவிநாசி திட்டம், மேலும் பல இடங்களில் நீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டு அந்த நீர்ப்பாசனத் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
காவிரியில் இருந்து குண்டாறு இடத்திற்கு தண்ணீர் எடுத்துச் செல்லும் திட்டம், போன்ற பல திட்டங்கள் உபரி நீர் வீணாகச் சென்று கடலில் கலக்காமல் தடுக்கப்பட்டு விவசாயத்திற்கும், தொழில்களுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது மேட்டூர் அணையில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனை விவசாயிகள் சிக்கனமாகப் பயன்படுத்தி விவசாயத்தை மேற்கொள்ள வேண்டும்" என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
இதையும் படிங்க:பிரசவத்துக்கு சென்ற மருமகள்.. 2 வயது பேரனுக்கு தாயாக மாறிய தாத்தா.. தென்காசி நெகிழ்ச்சி சம்பவம்!