வேலூர்:ராணிப்பேட்டை மாவட்டம், முகுந்தராயபுரம் பஞ்சாயத்திற்குட்பட்ட கிராமங்களில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தின் கீழ் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நடைபெற்ற சிறப்பு முகாம் திரு.வி.க.அரசினர் தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், காந்தி ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்ததோடு, நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து பொதுமக்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், “ திமுக ஆட்சிப் பொறுப்பேற்று 3 ஆண்டுகளில் எண்ணற்ற பல நல்ல திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த திட்டங்கள் கட்சி பாகுபாடு இல்லாமல் அனைத்து மக்களுக்கும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதில் ‘மக்களுடன் முதல்வர்’ என்ற திட்டம் எனக்கு மிகவும் பிடித்த திட்டம். இந்த திட்டத்தில் பொதுமக்களின் நீண்ட கால பிரச்சினைகளை மனுவாக அளித்து, அதன் மீது ஒரு மாத காலத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல், நீர்பிடிப்பு பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்த பொதுமக்களை அகற்றும்போது, அவர்களுக்கான நில வசதியை அரசு வழங்குகிறது. அந்த இடத்திற்கான பட்டா வசதியையும் 30 நாட்களுக்குள் வழங்கப்படுகிறது.
மகளிர் உரிமைத் தொகை திட்டம் ஏழை எளிய மகளிர் பயன்பெறும் வகையில் உள்ளது. இந்த திட்டத்தை கூடிய விரைவில் அனைத்து மகளிருக்கும் மாதம் ரூபாய் 1,000 தொகை கிடைப்பதற்கு வழிவகை செய்யுமாறு முதலமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம். இந்த கோரிக்கையை விரைவில் முதலமைச்சர் பரிசீலனை செய்து, அனைத்து மகளிருக்கும் ரூபாய் 1,000 கிடைக்க வழிவகை செய்வார்” என தெரிவித்தார்.