வேலூர்: வேலூர் மாவட்டம் வள்ளிமலை அருகே சேர்காட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்
ரூ.12.46 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தை மாநில நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்தார்.
கல்லூரி நிகழ்ச்சியில் பேசும் அமைச்சர் துரைமுருகன் (Credits - ETV Bharat Tamil Nadu) இந்த நிகழ்ச்சியில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி உட்பட பலர் பங்கேற்றனர். விழாவில் பேசிய அமைச்சர் துரைமுருகன், "தமிழக அரசு கல்வி பயில பல்வேறு திட்டங்களை அறிவித்து வருவதால் அதனை மாணவர்கள் பயன்படுத்திக்கொண்டு முன்னேற்றம் காண வேண்டும்.
தமிழக முதலமைச்சர் கல்விக்காக பல புதிய திட்டங்களை கொண்டு வந்துள்ளார். அதனை மாணவர்கள் நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டுமென தொடர்ந்து தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.
கடந்த காலங்களை விட தற்பொழுது கல்வி நிலையங்கள் அதிகரித்துள்ளதால் மாணவர்கள் கல்வி கற்பதில் அதிக ஆர்வம் காட்ட வேண்டும். உலகிலேயே கிராமப்புறங்களில் ஒரு பல்கலைக்கழகம் உள்ளது என்றால் அது காட்பாடி அருகே சேர்காட்டில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகம் தான். கிராமப்புற மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் சேர்க்காடு பகுதியில் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டுள்ளது.
ஒரு காலத்தில் மாநில பட்டியலில் இருந்த கல்வியை இந்திரா காந்தி எமர்ஜென்சி காலத்தில் மத்திய பொதுப் பட்டியலுக்கு மாற்றினார். அதைத்தான் இப்போது திரும்பக் கேட்கிறோம். மாநில பட்டியலில் இருந்த கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றியதை அடுத்து, அதனை ஆராய்வதற்காக 2017 ஆம் ஆண்டு பாஜக அரசு 17 பேர் கொண்ட குழுவை அமைத்தது.
இந்த குழுவில் 3 பேர் அரசு அலுவலர்களாக இருக்க வேண்டும் என்பது விதி. மீதம் உள்ள 14 பேரில் 13 பேர் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அந்த 13 பேரை நியமித்துவிட்டார்கள். மீதம் ஒரு ஆள் கிடைக்காமல், இங்கு விட்டுவிட்டு கனடாவில் இருந்து அந்த ஒரு உறுப்பினரை நியமித்தார்கள்.
அவர் யார் என்றால், அகில உலக பிராமணர் சங்கத்தின் கனடா நாட்டு தலைவர். யாருமே தமிழர் இல்லை. அனைவருமே பிராமணர்கள். நீங்க ஆட்சி நடத்துரீங்களா? அல்லது சாதி அரசியல் நடத்துறீங்களா? இதை எதிர்த்து பேசுவதால்தான் நமக்கு நிதி கொடுக்க மறுக்கின்றனர். இதுபோன்ற சில்லுண்டி தனத்தையெல்லாம் நாங்கள் எத்தனையோ முறை பார்த்துள்ளோம்" என்று துரைமுருகன் பேசினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க:அனிதா ராதாகிருஷ்ணன் சொத்துக்குவிப்பு வழக்கு; விஏஓவிடம் விசாரணை!