சென்னை: அமலக்கத்துறை சோதனைக்கு இடையில் அமைச்சர் துரைமுருகன் டெல்லி சென்றிருந்த நிலையில், துறை ரீதியான வேலைக்காகவே டெல்லி சென்றிருந்தேன் என்று தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
காட்பாடியில் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மகனும், மக்களவை உறுப்பினர் கதிர் ஆனந்த் ஆகியோருக்குச் சொந்தமான வீடு, கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி மற்றும் திமுக பிரமுகரான பூஞ்சோலை சீனிவாசன் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில், அமைச்சர் வீட்டில் எந்த ஆவணங்களும் கிடக்காத நிலையில், கடைசியாக கிங்ஸ்டன் கல்லூரியில் நடந்த 44 மணிநேர சோதனையை முடித்துவிட்டு, 9 கார்களில் அமலாக்கத்துறை அலுவலர்கள், கைப்பற்றிய ஆவணங்கள் மற்றும் பணத்துடன் வெளியே சென்றதாக தகவல் கிடைத்துள்ளது.
இதையும் படிங்க:44 மணிநேர சோதனை; அமைச்சர் துரைமுருகன் இடங்களில் இருந்து வெளியேறிய அமலாக்கத்துறை!
இதற்கிடையில் நேற்று முன்தினம் (ஜனவரி 04) சனிக்கிழமை, அமைச்சர் துரைமுருகன் திடீரென டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். சோதனைக்கிடையில் அவர் டெல்லி சென்றது குறித்து எந்த ஒரு அறிவிப்பும் தெரிவிக்காததால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் டெல்லி சென்றிருந்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று (ஜனவரி 05) ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு, விமானம் மூலம் சென்னை திரும்பியுள்ளார்.
விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “துறை ரீதியான வேலைக்காக டெல்லி சென்றிருந்தேன். அமலாக்கத்துறை சோதனை என்பது எனக்கு பழக்கப்பட்டது. எனவே, அமலாக்கத்துறை சோதனைக்கும் நான் டெல்லி சென்றதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.