தூத்துக்குடி:தூத்துக்குடி மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதனை சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
முன்னதாக கலை பண்பாட்டுத்துறையின் மூலம் கரகாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், தப்பாட்டம், மற்றும் நாதஸ்வரம் போன்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன், திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்துள்ள சாதனைகள் மற்றும் மாநில அரசால் பொதுமக்களுக்கு வரும் நலத்திட்டங்கள் குறித்து அனைவரும் அறிந்து கொள்ளும் வகையிலும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் பொருட்டும் இந்த சிறப்புப் புகைப்பட கண்காட்சி அமைக்கப்டுள்ளது. இக்கண்காட்சி தொடர்ந்து 4 நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கண்காட்சியில் இடம் பெற்றுள்ளவை:தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்களைப் பொதுமக்களிடையே எடுத்துச் செல்லும் வகையில் மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் இந்த கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கொண்டு வந்த திட்டங்கள், அவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.
மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த திட்டங்களான மக்களைத் தேடி மருத்துவம், உங்களைத் தேடி உங்கள் ஊரில், நீங்கள் நலமா? கலைஞரின் மகளிர் உரிமைத்திட்டம், மகளிருக்குக் கட்டணமில்லா பேருந்து பயணம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.
மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழையினால் பாதிக்கப்பட்ட இடங்கள் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டதை முதலமைச்சர் நேரில் பார்வையிட்டது. நகர்ப்புற வேலைவாய்ப்புத்திட்டம், காணி பழங்குடியினர்களுக்கு நில உரிமை ஆணை வழங்கியது.
பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கியது, புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்டவை குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல, தூத்துக்குடி எம்பி கனிமொழி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர்களால் தூத்துக்குடி மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ள நலத்திட்டங்கள் குறித்தும் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக அமைக்கப்பட்டுள்ள 'தமிழக அரசின் சாதனை விளக்கப் புகைப்பட கண்காட்சியை' பொதுமக்கள் பார்வையிட்டு அரசின் திட்டங்கள் குறித்துத் தெரிந்துகொண்டு பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:பேருந்து மீது லாரி உரசி விபத்து; உயிரிழந்த 4 மாணவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!