தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இயற்கை பேரிடர் மீது பழி போடாமல், இயற்கையோடு ஒன்றி தான் நாம் வாழ வேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஷ்! - MINISTER ANBIL MAHESH

நாம் எதையும் செய்யாமல் இயற்கை பேரிடர் மீது பழி போடுவதில் அர்த்தம் இல்லை என்றும் இயற்கையோடு ஒன்றி வாழ்வதை தவிர வேறு வழியில்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

அமைச்சர் அன்பில் மகேஷ் புத்தகம் வெளியீடு
அமைச்சர் அன்பில் மகேஷ் புத்தகம் வெளியீடு (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 17, 2024, 5:07 PM IST

சென்னை:சி.ஏ.ஜி என்ற தனியார் தொண்டு அமைப்பு சார்பில், அனைவருக்குமான காலநிலை கல்வியறிவு- திறன் மற்றும் நடவடிக்கை இடையேயான மேம்பாடு குறித்து கருத்தரங்கு சென்னை கிண்டியில் நடைபெற்றது.

இதில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ‌வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் காலநிலை மாற்றம் மற்றும் உலக அளவில் எடுக்கப்பட்டு வரக்கூடிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் அரசு பள்ளிகளை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். காலநிலை மாற்றம், காலநிலை கல்வியறிவு தொடர்பான புத்தகத்தை வெளியிட்டு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது; '' இயற்கை பேரிடர் என்று நாம் இயற்கை மேல் பழியை போடுகிறோம். முதலில் நமக்கு கட்டுப்பாடு உள்ளதா? ஒழுக்கத்துடன் வாழ்கிறோமா? நாம் எதுவுமே செய்யாமல் இயற்கை பேரிடர் என்று சொல்வதில் அர்த்தமே இல்லை என்று நினைக்கிறேன். என்னைப் பொறுத்தவரை நம் செயல்பாடுகள் எப்படி உள்ளது, அது தான் சமூகத்திற்கான நம் பங்காக இருக்கும். 20 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு 60 சதவீதம் அதிகமாக இயற்கை பேரிடர் வந்துள்ளது.

வேறு வழியே இல்லை

2000 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை அதிகப்படியான பேரிடர்களை சந்தித்த நாடுகள் எவை என்று வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில் சீனா, அமெரிக்கா மற்றும் இந்தியா உள்ளது. பொருளாதார ரீதியான இழப்பும், உயிரிழப்பும் அதிகமாகியுள்ளது. வேறு வழியே இல்லை, இயற்கையோடு ஒன்றி தான் நாம் வாழ வேண்டும். சுற்றி வளைத்து மறுபடியும் நாம் இயற்கை உணவு பக்கம் தான் செல்கிறோம்.

ஒவ்வொரு முறையும் இயற்கை பேரிடர்கள் ஏற்படும்போது மட்டும் விழிப்புணர்வு பற்றி பேசுவதில் அர்த்தமே இல்லை. எத்தனை இயற்கை பேரிடர்கள் வந்தாலும் நம்மை எப்படி பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது தான் அவசியம்.

காலநிலை மாற்றம்

கடந்த 3 ஆண்டுகளாக காலநிலை மாற்றம், இயற்கை பேரிடர்கள் பற்றிய பேச்சு தான் எங்கும் உள்ளது. இந்த ஆட்சி வந்த பின் அதிகம் பேசப்பட்டது பள்ளிக் கல்வித் துறையும், காலநிலை மாற்றத்துறையும் தான். சென்னை போன்ற நகரங்களில் தான் இந்த காலநிலை பிரச்சினை அதிகம் உள்ளது.

அதிகாரிகளும் வேகத்தில் எதையும் செய்து விட முடியாது, பொறுமையாக சரியாக செய்ய வேண்டும். அதற்கு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். பள்ளிக் கல்வித் துறை சார்பில் 2.23 கோடியில் கொண்டு வரப்பட்ட திட்டம்தான் இயற்கையை எப்படி நேசிக்க வேண்டும், அதன் மூலம் பல்லுயிர்கள் இழப்பாக இருந்தாலும் அல்லது இயற்கை பேரிடராக இருந்தாலும் இது சார்ந்து எப்படி தற்காத்துக் கொள்ளலாம் என்று ஒவ்வொருவரும் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று கவனம் செலுத்துகிறோம்.

வரும் காலத்தில் நாம் மனித இனம் மட்டுமின்றி இயற்கை சார்ந்த அனைத்தும் காப்பாற்ற இந்த கருத்தரங்கு மிக பயனுள்ளதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை'' என்றார்.

ABOUT THE AUTHOR

...view details