திருச்சி:ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி கட்டடப் பொறியாளர்கள் சங்கப் பொதுக் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று குத்துவிளக்கேற்றித் துவக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ.7 ஆயிரத்து 500 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, 18 ஆயிரம் வகுப்பறைகள், சுற்றுப்புறச் சுவர்கள், கழிவறைகள், ஆய்வறைகள் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கட்டடங்களைக் கட்டித் தரும் பொறியாளர்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து, அவர்களின் கோரிக்கையை முதலமைச்சருக்கு எடுத்துக் கூறுவேன்.
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu) தனியார்ப் பள்ளிக்கு நிகராக அரசுப் பள்ளிகளின் கட்டடங்கள் கட்டப்படுவதால்தான் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. பாரத பிரதமருடனான தமிழக முதலமைச்சர் சந்திப்பு எப்பொழுதும், 15 நிமிடங்கள் மட்டுமே நடைபெறும். ஆனால் இன்று, 45 நிமிடங்கள் சந்திப்பு நடைபெற்றுள்ளது. பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதி தொடர்பாக மாதாமாதம் அதிகாரிகள் மத்திய அரசின் அதிகாரிகளைச் சந்தித்து வந்தார்கள். நான் இரண்டு முறை துறையின் அமைச்சரைச் சந்தித்துள்ளேன்.
இதையும் படிங்க: "471 நாட்கள் தனிமையின் இருள் நீங்கி சூரியனின் காலடியில்" - முதல்வர் ஸ்டாலினை சந்தித்த செந்தில் பாலாஜி நெகிழ்ச்சி!
இந்த நிலையில், முதலமைச்சர் நேரடியாகவே சென்று பிரதமரைச் சந்தித்துள்ளார். தமிழ்நாட்டிற்குத் தேவையான நிதியை வழங்க வேண்டும் என்கிற அழுத்தத்தையும் பிரதமருக்கு வழங்கியுள்ளார். பள்ளி மாணவர்களின் எதிர்காலத்திற்காகவும், ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும் விதமாகவும், வேறு வேறு காரணங்கள் கூறாமல், மத்திய அரசு தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்க வேண்டும்.
செந்தில் பாலாஜியை, 471 நாள் சிறையில் வைத்திருந்ததற்கு நீதிமன்றமே அமலாக்கத் துறையை கண்டித்துள்ளது. அமலாக்கத்துறை அதற்காக மன்னிப்பும் கேட்டுள்ளது. கொங்கு மண்டலத்தில் கட்சியை வளர்த்து விடுவார் என்பதற்காக செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவர்கள் இதுபோன்று செய்யக்கூடாது என்பதற்காக தற்போது வழங்கப்பட்ட தீர்ப்பு தெளிவாக்கியுள்ளது. மேலும், திமுக பவள விழாவில் செந்தில் பாலாஜி நிச்சயம் கலந்து கொள்வார். ஆனால் அமைச்சராக பங்கேற்பாரா? என்பது குறித்து முதலமைச்சர் தான் முடிவு செய்வார்" எனத் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்