சென்னை: ஊர்ப்புற நூலகர்களுக்கு காலமுறை ஊதியம் மற்றும் பதவி உயர்வு வழங்கியமைக்கு தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை பணியாளர் கழகம் சார்பில் நன்றி தெரிவித்து பாராட்டு விழா நடைபெற்றது.
இதில் தமிழக அரசு சார்பில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் சென்னை மாவட்ட நூலக ஆணை குழு தலைவர் மனுஷ்யபுத்திரன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்கள் சந்திப்பு (Credits - ETV Bharat Tamil Nadu) இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளிலும் அரையாண்டு தேர்வுக்கான பாடத்திட்டங்கள் நடத்திமுடிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் இரண்டாம் தேதியில் இருந்து செய்முறை தேர்வுகள் நடைபெற வேண்டிய காலம். மழையால் பாதிக்கப்பட்டுள்ள பள்ளிகளின் மாவட்டங்களில் அரையாண்டு செய்முறை தேர்வு நடத்த முடியாத சூழல் இருந்தால் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் செய்முறை தேர்வு நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளோம்.
மேலும், டிசம்பர் ஒன்பதாம் தேதிக்குள் பள்ளிகள் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டால் அரையாண்டு தேர்வுகள் வழக்கம் போல நடைபெறும். ஒருவேளை பள்ளிகளில் மழை நீர் வடியாமல் தேங்கி இருந்தால் அரையாண்டு தேர்வுகள் ஜனவரி மாதம் நடத்தப்படும். மாணவர்களின் பாதுகாப்புக்கு தான் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பள்ளிகளின் நிலை என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை!
இதுமட்டும் அல்லாது, எத்தனை மாவட்டங்களில் எந்தெந்த பள்ளிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது? என்பது குறித்து மாவட்ட கல்வி அலுவலர்களிடம் பட்டியலை கேட்டுள்ளோம். வேறு பிரச்சனைகள் பள்ளிகளில் இருக்கிறதா? உள்ளே நுழைவதற்கு ஏதாவது பிரச்சனைகள் இருக்கிறதா? என்பது குறித்தும் கணக்கெடுத்து வருகிறோம்.
மேலும், வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ள பள்ளிகளில் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலரின் அறிவுறையோடு தேர்வுகள் நடத்த திட்டமிட்டுள்ளோம். மழையால் பாதிக்கப்பட்ட பள்ளிகளை தவிர மீதி உள்ள பள்ளிகளில் ஏற்கனவே அறிவித்தபடி வரும் டிசம்பர் 9ஆம் தேதியில் இருந்து அரையாண்டு தேர்வு மாற்றம் இன்றி நடைபெறும்" என்று தெரிவித்தார்.
அதன் தொடர்ச்சியாக பேசிய அவர், "தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதற்கான வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நீதிமன்ற வழக்கு முடிந்து விட்டால் உடனடியாக 2500 பள்ளிகளுக்கும் தலைமை ஆசிரியரை நியமிக்க தயாராக இருக்கிறோம்.
234 தொகுதிகளிலும் அரசின் திட்டங்கள் பள்ளிகளுக்கு எவ்வாறு சென்றுள்ளது என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டோம். மேலும், எந்தெந்த பள்ளிகளில் புத்தகங்களோடு மாணவர்களின் சான்றிதழ்கள் நனைந்துள்ளதோ அந்த பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ்களும் புத்தகங்களும் உடனடியாக வழங்கப்படும். சான்றிதழ் வைக்கும் அறை, தலைமை ஆசிரியர் அறை தரைதளத்தில் இருந்தால் உடனடியாக முதல் தளத்திற்கு மாற்றவும் கூறியுள்ளோம்" எனத் தெரிவித்தார்.