சென்னை:தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் 3 ஆயிரத்து 192 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளிகல்வித்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். அந்த கூட்டத்தில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமாெழி, பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மதுமதி, தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் சங்கர், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், தொடக்கக்கல்வித்துறை இயக்குனர் நரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளிக்கல்வித்துறையின் 3 ஆண்டு செயல்பாடுகளை ஆய்வு செய்தார். குறிப்பாக தமிழ்புதல்வன், புதுமைப்பெண், அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும், ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களை நிரப்பவும் அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ்: உலக அரங்கில் சாதிக்கத் தயாராகும் சென்னை வீரர்கள்!
அதன் அடிப்படையில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஏற்கனவே நிரப்புவதற்கு அனுமதிக்கப்பட்டு, சான்றிதழ் சாரிபார்ப்பு முடிந்துள்ள 3 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை விரைவில் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், 128 தொழிற்கல்வி ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட உள்ளனர்" எனத் தெரிவித்தார்.
மேலும், இதுதொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் தளத்தில், "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளிக்கல்வித்துறை சார்பில், 29 மாவட்டங்களில், 141 அரசுப் பள்ளிகளில் ரூ.171.16 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 754 புதிய வகுப்பறைக் கட்டடங்கள், 17 ஆய்வகக் கட்டடங்கள் மற்றும் உண்டு உறைவிடப் பள்ளிகளுக்கான கட்டடங்களையும் திறந்து வைத்தார். மாணவர்களுக்கான கற்றல் சூழலை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தும் முதலமைச்சருக்கு நன்றி" எனப் பதிவிட்டுள்ளார்.
அதாவது, 2023ஆம் ஆண்டிற்கான பட்டதாரி ஆசிரியர், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் பணிகளுக்காக 3,192 காலிப்பணியிடங்களுக்கு 41 ஆயிரத்து 485 தேர்வர்கள் விண்ணப்பம் செய்தனர். அவர்களுக்கு 2023 பிப்ரவரி 4ஆம் தேதி 130 மையங்களில் ஆன்லைன் மூலம் ஒஎம்ஆர் OMR (Optical Mark Reader) வழியில் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம், 2024 ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி இணையதளத்தில் மற்றும் மே 22ஆம் தேதியும் வெளியிட்டது. மேலும் பட்டதாரி ஆசிரியர், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி முடிக்கப்பட்டு, தேர்வர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்