சென்னை:சென்னையில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் கல்வி தொலைக்காட்சி உயர் தொழில்நுட்ப படப்பதிவுக் கூடங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று (பிப்.5) திறந்து வைத்தார். மேலும் ஸ்டூடியோவில் இருந்த கேமராவையும் இயக்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "கல்வி தொலைக்காட்சிக்கு விர்ச்சுவல் ஸ்டுடியோ (Virtual Studio), உயர் தொழில்நுட்ப ஆய்வகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்டூடியோக்களை உலக தரத்தில் கொண்டுவர வேண்டும் என்ற முதலமைச்சரின் ஆசையை நிறைவேற்றி உள்ளோம்.
மாணவர்களுக்கு புதுப்புது யுக்திகளோடு பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தோம். அதன் ஒரு பகுதியாக தான் இன்று ஸ்டூடியோ திறக்கப்பட்டுள்ளது. உயர் தொழில்நுட்பத்தின் மூலம் நெய்தல், பாலை, மருதம் போன்ற பகுதிகளையும் எளிமையாக மாணவர்களுக்கு புரியும் வகையில் உருவாக்கியுள்ளோம்.
இதை சொல்லிக் கொடுத்து படிப்பதை விட நேரடியாக மாணவர்களின் கற்பனை திறனை அங்கேயே கொண்டு செல்லும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பத்தை எல்லா பாடங்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும், ஒன்றாம் வகுப்பு குழந்தைக்கு ரைம்ஸ், கதைகள் சொல்லித் தருவதில் இருந்து 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் இதைக் கொண்டு செல்ல உள்ளோம்.