மதுரை:ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தெரிவு செய்யப்பட்ட 33 நேரடி நியமன வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பணி நியமன ஆணைகளை மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலக கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்வில் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “புதிதாக நேரடி நியமனம் பெறக்கூடிய வட்டார கல்வி அலுவலர்கள் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு அடிபணியாமல் பணியாற்றுவதன் மூலம் தான் நல்ல நிர்வாகத்தை தர முடியும். தங்கள் பணி புரிகின்ற பகுதிகளுக்கு ஏற்றவாறு தங்களது நிர்வாக திறனை வளர்த்துக் கொள்வது அவசியம்” என்றார்.
இது குறித்து தொடக்கக்கல்வி இயக்ககம், “பள்ளிக் கல்வித் துறையின் ஓர் அங்கமாக தொடக்கக் கல்வி இயக்ககம் செயல்பட்டு வருகின்றது. தமிழ்நாட்டில் இயங்கி வரும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளின் ஒன்றிய அளவிலான ஆய்வு அலுவலர்களாக செயல்படுபவர்கள் தொடக்கக் கல்வி இயக்ககத்தில் பணிபுரியும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஆவர்.
ஒன்றிய அளவில் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை ஆய்வு செய்தல், ஆசிரியர்களுக்கு ஊதியம் பெற்று வழங்குதல், அரசின் நலத்திட்ட உதவிகளை மாணவர்களுக்கு கொண்டு சேர்த்தல் மற்றும் மாணவர்களின் வகுப்பறைக் கற்றல் மேம்பாட்டினை தொடர்ந்து கண்காணிப்பது இவர்களின் முக்கிய பணியாகும்.