சென்னை:கொடைக்கானலில் நடைபெற்று வரும் கலைஞர் ஆர்மி பயிற்சி பட்டறையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "JABIL தொழிற்சாலை மணப்பாறை சிப்காட் தொழில்பேட்டையில் அமைய உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ரூ.2 ஆயிரம் கோடிக்கும் அதிகமான மதிப்பீட்டில் அமையுள்ள இத்தொழிற்சாலையின் மூலம் 5,000க்கும் மேற்பட்டோர் பணி வாய்ப்பினை பெற உள்ளனர். குறிப்பாக, பெண்கள் அதிகப்படியான பணி வாய்ப்புகளை பெறுவதற்கான ஒப்பந்தம் முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது. இதற்காக முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
புதிய கல்விக் கொள்கை : தமிழ்நாட்டில் எக்காரணத்தைக் கொண்டும் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம். கல்வியில் அரசியல் செய்யாதீர்கள் என்கிறார் மத்திய கல்வித்துறை அமைச்சர். ஆனால், கல்வியில் அரசியல் செய்வது அவர்கள்தான். தாய் மொழியைத் தான் நாங்கள் ஆதரிக்கிறோம் என்கிறார் மத்திய கல்வி அமைச்சர். தாய்மொழி உணர்வு என்றால் தமிழ் தான்.
ஆனால் புதிய கல்விக் கொள்கையில் என்ன செய்கிறார்கள் என்பதை மத்திய அரசின் அறிக்கையின் மூலமே அறியலாம். குறிப்பாக, அறிவியல் நூல்களையும், தொழில் சார்ந்த நூல்களையும், பல்வேறு துறை சார்ந்த நூல்களையும், தமிழில் மொழி பெயர்த்து வழங்கும் திட்டத்தையும் நாம் செயல்படுத்தி வருகின்றோம்.
இந்தி எதிர்ப்பு போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் வழியாக நமது மொழி உரிமையை பாதுகாத்து வருகின்றோம். அண்ணாவின் இரு மொழி கொள்கையைத் தான் நாம் பின்பற்றி வருகின்றோம். இதுபோன்ற வரலாறுகள் நமக்கு இருக்கும் நிலையில் மத்திய அமைச்சர் தாய்மொழி குறித்து பேச வேண்டிய அவசியம் இல்லை.
நிதியை நிறுத்துவதன் வழியாக 15,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் மத்திய அரசு சிக்கலை ஏற்படுத்துகின்றது. புதிய கொள்கைகளை ஏற்றுக் கொண்டால்தான் நிதி தர முடியும் என்று மத்திய கல்வி அமைச்சர் என்னிடம் நேரடியாகவே தெரிவித்தார்.