சென்னை: உலகத் தமிழ் ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில் அதன் தலைவர் C.கனகராஜ் தாக்கல் செய்திருந்த மனுவில் தமிழ் இலக்கியங்கள், கல்வெட்டுகள், ஓலைச் சுவடிகளை பாதுகாக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கப்பூர்வாலா, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் கனகராஜ் ஆஜராகி, தமிழ் கல்வெட்டுகளைப் பாதுகாப்பது தொடர்பாகப் பதில் மனுவில் ஏதும் குறிப்பிடவில்லை எனவும், ரஷ்யா, இலங்கை போன்ற நாடுகளில் கல்வெட்டுகள் தனி இடத்தில் வைத்துப் பாதுகாக்கப்படுகிறது எனத் தெரிவித்தார்.
அப்போது தலைமை நீதிபதி குறுக்கிட்டு, அந்த நோக்கத்தில் தான் கீழடி உள்ளதே எனக் கேள்வி எழுப்பியபோது, சென்னையில் பாதுகாப்பதற்கான இடம் இல்லை எனப் பதிலளித்தார். பின்னர் நீதிபதிகள், மாமல்லபுரத்தில் சுனாமிக்குப் பிறகு அங்கே கல்வெட்டு இருந்தது அடையாளம் காணப்பட்டதையும் சுட்டிக்காட்டினர்.
மேலும், தொல்லியல் துறையின் பாதுகாப்பில்லாத இடங்கள் தவிர்த்து கோயில்கள், மலை, பாறை போன்ற இடங்களில் உள்ள கல்வெட்டுகளையும் பாதுகாக்க வேண்டும் எனக் கூறி, இல்லாவிட்டால் அதையும் வெட்டி எடுத்துவிடுவார்கள் என நீதிபதிகள் அறிவுறுத்தினர். இந்த விவரங்களைக் கனிம வளத்துக்குத் தெரிவித்தால் தான் அந்த இடங்களில் குவாரி நடவடிக்கைக்கு அனுமதி வழங்காமல் இருப்பார்கள் என அறிவுறுத்தினர்.
கல்வெட்டுகளைப் பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை ஏப்ரல் 5ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். இதேபோல வெளிநாடு வாழ் தமிழர்கள் நலனுக்குத் தனிக் குழு அமைக்க வேண்டும்.
இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும். உள்ளூர் விமானங்களில் தமிழில் அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் c.கனகராஜ் தொடர்ந்த வழக்குகளும் ஏப்ரல் 5ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க:இண்டிகோ விமானத்தில் குஷன் இல்லாத இருக்கைகள்! இணையத்தில் வைரலாகும் பெண் பயணியின் பதிவு!