தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நடராஜர் கோயிலில் கட்டுமானங்கள்! உறுதியளித்த தீட்சிதர்கள்: தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு - madras high court

Chidambaram Nataraja Temple issue: சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரத்தில் தீட்சிதர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மறு ஆய்வு மனுவிற்குப் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 4, 2024, 3:47 PM IST

Updated : Mar 4, 2024, 5:07 PM IST

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலின் நான்கு கோபுரங்களும் அமைந்துள்ள பகுதியில் எந்த அனுமதியும் பெறாமல் நந்தவனங்கள் அமைக்கப்படுவதாகவும், கோயிலின் முதல் மற்றும் இரண்டாவது பிரகாரங்களில் நூறு அறைகள் கட்டப்படுவதாகவும் கூறி, கோயில் தீட்சிதரான நடராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில், “நந்தவனம் அமைப்பதற்காக நூறு ஆண்டுகள் பழமையான மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாகவும், அதனால், பொது தீட்சிதர்கள் குழுவால் கட்டுமானங்கள் மேற்கொள்ளத் தடை விதிக்க வேண்டும்” என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், “கோயிலில் அனுமதியின்றிக் கட்டப்பட்டுள்ள கட்டுமானங்கள் குறித்து ஆய்வு செய்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறைக்கு கடந்த அக்டோபர் 17ஆம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி, பொது தீட்சிதர்கள் தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு, உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது பொது தீட்சிதர்கள் தரப்பில், “இந்தியத் தொல்லியல் துறையுடன் இணைந்து தான் இந்து சமய அறநிலையத் துறை ஆய்வு செய்ய முடியுமே தவிர, இந்திய தொல்லியல் துறையை தமிழக அரசு பிரதிநிதித்துவப்படுத்த முடியாது” என தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்த நீதிபதிகள், சிதம்பரம் நடராஜர் கோயிலில் அனுமதியின்றிக் கட்டப்பட்டுள்ள கட்டுமானங்கள் குறித்து ஆய்வு செய்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தனர்.

இந்த வழக்கு இன்று (மார்ச்.04) விசாரணைக்கு வந்தது. அப்பொழுது, இந்து சமய அறநிலையத் துறை தரப்பில், “சிதம்பரம் நடராஜர் கோயிலில் அனுமதியின்றி கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுகிறதா என்று ஆய்வு செய்யப்பட்டது. அதில், விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், இது சம்பந்தமான மற்றொரு வழக்கில், கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படமாட்டாது என தீட்சிதர்கள் தரப்பில், மற்றொரு அமர்வில் உறுதியளிக்கப்பட்டுள்ளதாகவும்” தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, தீட்சிதர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மறு ஆய்வு மனுவிற்குப் பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க:நீங்கள் பேசியதன் பின்விளைவுகள் தெரியாதா? - அமைச்சர் உதயநிதியின் சனாதன தர்மம் குறித்த பேச்சுக்கு நீதிமன்றம் கேள்வி!

Last Updated : Mar 4, 2024, 5:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details